NATIONAL

பூமிபுத்ரா நிறுவனங்களை விட பூமிபுத்ரா அல்லாத நிறுவனங்கள் அதிகமாக ஹலால் சான்றிதழைப் பெற்றுள்ளன

ஷா ஆலம், ஜூலை 18: பூமிபுத்ரா நிறுவனங்களை விட பூமிபுத்ரா அல்லாத நிறுவனங்கள் அதிகமாக ஹலால் சான்றிதழைப் பெற்றுள்ளன என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

பூமிபுத்ரா அல்லாத 5,720 நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது 3,619 பூமிபுத்ரா நிறுவனங்கள் அல்லது 39.6 சதவீதம் மட்டுமே ஹலால் சான்றிதழை பெற்றுள்ளன என்று இன்று மக்களவை அமர்வில் பேசிய போது அவர் கூறினார்.

“மலேசியாவின் ஹலால் சான்றிதழ் உலக அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இருப்பினும், அதை தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப மறு மதிப்பீடு செய்ய வேண்டும்.

“ஹலால் கட்டமைப்பில் சான்றிதழ்கள், திறமைகள், கொள்கைகள் , மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் ஹலால் சந்தைப்படுத்தல் ஆகியவை அடங்கும். இந்தத் துறையை மேம்படுத்த நாங்கள் ஒரு சிறப்புப் பட்டறையை அமைப்போம்” என்று அவர் கூறினார்.

கோலா பில்லா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அட்னான் அபு ஹாசனின் கேள்விக்கு பதிலளித்த அவர், ஜூலை மாதம் வரை மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையிடமிருந்து 9,146 நிறுவனங்கள் ஹலால் சான்றிதழைப் பெற்றுள்ளன.

அந்த எண்ணிக்கையில், 8,105 குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அடங்கியுள்ளன, மீதமுள்ளவை பன்னாட்டு நிறுவனங்கள் ஆகும்.

இதற்கிடையில், சான்றிதழைப் பெறுவதில் பூமிபுத்ரா நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்க அரசாங்கம் ஹலால் தொழில்துறை திட்டத்தை அறிமுகப்படுத்தியது என்று அஹ்மட் ஜாஹிட் கூறினார்.

மேலும், உள்ளூர் நிறுவனங்களை உள்ளடக்கிய பல்வேறு மேம்பாட்டு திட்ட முயற்சிகளையும் அரசாங்க நிறுவனமான ஹலால் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் பெர்ஹாட் (HDC) மேற்கொண்டது.

“இத்திட்டத்தின் மூலம், சப்ளை சங்கிலியை வலுப்படுத்தவும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மாற்றியமைக்கவும் மற்றும் புதுமையான தயாரிப்புகளை வணிகமயமாக்கவும் நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.


Pengarang :