NATIONAL

விண்ணைத்தொடும் வாழ்க மாமன்னர் முழக்கத்துடன் 17வது மன்னராக சுல்தான் இப்ராஹிம் முடிசூட்டு விழா

கோலாலம்பூர், ஜூலை 18: சனிக்கிழமையன்று, மலேசியாவின் 17வது மன்னராக மாட்சிமை தாங்கிய சுல்தான் இப்ராஹிம் பதவியேற்கும் போது, விண்ணைத்தொடும் வாழ்க மாமன்னர் “டவுலாட் துவாங்கு” என்ற முழக்கங்கள் நாடு முழுவதும் எதிரொலிக்கும்.

எதிர்வரும் ஜூலை 20, 2024 அன்று, கூட்டரசு அரசியலமைப்பு படி மாமன்னரை அரச தலைவராகக் கொண்ட நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நடைமுறையை நாடு மீண்டும் உறுதிப்படுத்தும் நாளாக மலேசிய வரலாற்றில் பொறிக்கப்படும்.

புதிய மன்னருக்கு முடிசூட்டு விழா, செப்டம்பர் 2, 1957 அன்று முதன் முதலில் நடைபெற்றது. இது மத்திய அரசியலமைப்பின் 32(1) பிரிவின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒரு முறை நடைபெறும் மலேசியாவின் மிக முக்கியமான தேசிய நிகழ்வாகும்.

மேலும், அரசியலமைப்பு விதி 32(1) பிரிவின் கீழ், மாமன்னர் என அழைக்கப்படும் கூட்டமைப்பின் உச்ச தலைவர் மற்ற கூட்டரசில் உள்ள அனைவரையும் விட உச்ச அதிகாரம் கொண்டவராக இருப்பார்.

சுருக்கமாக, (அகோங்) மாமன்னர் என்பவர் மலேசியாவின் மிக உயர்ந்த பதவியில் உள்ள அரச தலைவர் ஆவார். கூட்டாட்சி அரசியலமைப்பின் கீழ், நாட்டின் மூன்று முக்கிய பிரிவுகளான அமைச்சரவை நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றில் அவரது மாட்சிமை, மிக  முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆட்சியாளர்களின் மாநாட்டில் கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 32(2) மூலம் அதிகாரம் பெற்ற ஒன்பது மலாய் ஆட்சியாளர்களிடையே வாக்குகள் மற்றும் சுழற்சி முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 17 மலாய் ஆட்சியாளரை மலேசியா மன்னராக நியமித்துள்ளது.

நெகிரி செம்பிலானிலிருந்து சுழற்சி தொடங்கியது. அதைத் தொடர்ந்து சிலாங்கூர், பெர்லிஸ், திரங்கானு, கெடா, கிளந்தான், பகாங், ஜோகூர் மற்றும் பேராக் ஆகியவை இடம்பெறறன.

பாரம்பரியமான இஸ்தானா நெகாரா வில் உள்ள பாலாய் ரிங் சாரியில் இருந்து, 17வது மாமன்னரின் ஐந்தாண்டு ஆட்சி தொடங்கப்படும், அவ்விழாவைத் தொடர்ந்து, மாமன்னரின் பதவியேற்பை குறிக்கும் வகையில் தேசிய கொடி, அதிகாரப்பூர்வக் கொடியாக ஜோகூர் அரண்மனையில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக ஏற்றப்படும்.

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் தந்தையார், மறைந்த சுல்தான் இஸ்கண்டார் அவர்கள், எட்டாவது மாமன்னராக ஏப்ரல் 25, 1984 முதல் ஏப்ரல் 25, 1989 வரை ஆட்சி செய்தார். சுல்தான் இப்ராஹிமின் நியமனம் மலாய் ஆட்சியாளர்களின் இரண்டாவது சுழற்சியைக் குறிக்கிறது.

மேலும், நாட்டின் அரச தலைவரை நிறுவுவதில் தொடர்புடைய கிட்டத்தட்ட 67 ஆண்டு கால சம்பிரதாயங்கள் பழக்கவழக்கங்கள், சடங்கு நடவடிக்கைகள் ஆகியவை அனைத்தும் அப்படியே மாறாமல், மாற்றாமல் பயன்படுத்தப்படும்.

இஸ்தானா நெகாரா வின் கிராண்ட் சேம்பர்லைன் (டத்தோ பாடுகா மகாராஜா லீலா) டத்தோ அசுவான் எஃபெண்டி ஜைராகித்னைனியின் கூற்றுப்படி, முந்தைய அனைத்து பதவி ஏற்பு விழாவிலும் பயன்படுத்தப்பட்ட அனைத்து அரச சம்பிரதாயங்களும் 17வது மன்னர் பதவியேற்கும் போதும் பயன்படுத்தப்படும்.

“இது ஒரு முக்கியமான நிகழ்வு. நமது நாட்டின் கலாச்சார பாரம்பரியம் மற்றும் மரபுகளின் சிறப்பை நாங்கள் இன்னும் நிலைநிறுத்துகிறோம். முதல் மன்னர் பதவியேற்றதிலிருந்து இந்த ரெ ஜாலியா பாதுகாக்கப் படுகிறது. இப்போது 17வது முறையாக மீண்டும் பயன்படுத்தப்படும் என்று அவர் பெர்னாமாவுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

தொழில்நுட்ப முன்னேற்றங்களால், குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்தில், 17வது மாமன்னரின் பதவியேற்பு விழாவின் அலங்கார மற்றும் மரியாதை அம்சங்கள் எதுவும் சமரசம் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜாவி ஸ்கிரிப்ட்டில் கையால் எழுதப்பட்ட விழாவிற்கான அழைப்பிதழ் மூலம் இது தெளிவாகத் தெரிகிறது.

இங்குள்ள தேசிய மசூதியில் இன்று நடைபெற்ற யாசின் ஓதுதல் மற்றும் ‘டோஹா செலமட்’ விழாவுடன் 17வது மன்னரின் பதவியேற்பு விழா தொடங்கியது.

“நாளை நாங்கள் தேசிய மசூதியில் ஒரு சிறப்பு சொற்பொழிவு மற்றும் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்துவோம்.

கூட்டாட்சி பிரதேசங்களிலும், சுல்தான்கள் இல்லாத மாநிலங்களிலும் உள்ள அனைத்து மசூதிகளிலும் இந்த பிரசங்கம் வாசிக்கப்படும் என்றும், சுல்தான்கள் உள்ள மாநிலங்களில், அந்தந்த ஆட்சியாளர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

“இஸ்தானா நெகாராவில் சனிக்கிழமை காலை 9.15 மணிக்கு முடிசூட்டு விழா தொடங்கும். சுல்தான்கள், யாங் டிபெர்துவான் நெகிரி, பிரதமர் (டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்), அமைச்சர்கள், இந்நாட்டில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திர சமூகம் மற்றும் உயர்மட்ட தேசிய தலைவர்கள் உட்பட சுமார் 700 விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.,” என அவர் கூறினார்.

புருனை சுல்தான் ஹஸனுல் போல்கியா மற்றும் பஹ்ரைன் மன்னர் ஷேக் ஹமட் பின் இசா அல் கலீஃபா ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாலையில், இஸ்தானா நெகாரா வில் அரச விருந்து நிகழ்வு  நடைபெறும்.

– பெர்னாமா


Pengarang :