NATIONAL

டாக்காவிலுள்ள மலேசியர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும்

புத்ராஜெயா, ஜூலை 19 – வங்காளதேசத்தில்  நிகழ்ந்து வரும்  மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து டாக்காவில் உள்ள மலேசிய தூதரகம் மூலம் வெளியுறவு அமைச்சு அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது.

அந்நாட்டில்  தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பரவலாக இடையூறு ஏற்பட்டுள்ள போதிலும் அங்குள்ள அனைத்து மலேசியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த உள்ளூர் அதிகாரிகளுடன் தூதரகம்  இணைந்து செயல்பட்டு வருகிறது என்று அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியது.

போராட்டம் தொடங்கியதைத் தொடர்ந்து டாக்காவில் உள்ள மலேசிய மாணவர்கள் தங்கள் பாதுகாப்புக்காகத் தூதரகத்தில்  ஒன்று கூடுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.  அம்மாணவர்கள் அனைவரும் போராட்டங்களால் பாதிக்கப்பட்ட டாக்காவில் உள்ள உள்ளூர் கல்விக் கூடங்களைச் சேர்ந்தவர்கள் என்று அமைச்சு தெரிவித்தது.

மாணவர்களின் தேவைகளை மதிப்பிடுவதற்கும் அவர்களுக்கு  உடனடி உதவிகளை வழங்குவதற்கும் தூதரக அதிகாரிகள் ஆரம்பக் கட்டக் கலந்துரையாடலை நடத்தினர்.

மலேசியா திரும்ப விரும்பும் மாணவர்களுக்கு பயண ஏற்பாடு செய்ய உதவுவது மற்றும் அவர்களுக்கு தற்காலிக தங்குமிடம் வழங்குவது உள்ளிட்ட பொருத்தமான தீர்வுகளை தூதரகம் ஆய்வு செய்து வருகிறது.

வங்காளதேசத்தில்  வசிக்கும் அனைத்து மலேசியர்களும் போராட்டப் பகுதியில் இருப்பதைத் தவிர்த்து விழிப்புடன் இருக்கும் அதேவேளையில்  உள்ளூர் அதிகாரிகளின்  பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி நடக்கும்படியும் வெளியுறவு அமைச்சு கேட்டுக்கொண்டது.

வெளிநாடுகளில் உள்ள மலேசியர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கப்படுவதை உறுதி செய்யும் கடப்பாட்டை அரசாங்கம் கொண்டுள்ளதாவும்  அந்நாட்டின் நிலைமை தொடர்பான சமீபத்திய மேம்பாடுகள் குறித்து அவ்வப்போது தெரிவிக்கப்படும் என்றும் அமைச்சு கூறியது.

உதவி தேவைப்படும் மலேசியர்கள் டாக்காவில் உள்ள மலேசிய தூதரகத்தை எண் 19,  எண் 6 சாலை, பரிதாரா டிப்ளோமாடிக் என்க்ளேவ், டாக்கா – 1212, வங்காளதேசம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் +880241081892 / 1895 அல்லது +88 018 4179 8077 என்ற எண்கள் (அவசரத்திற்கு மட்டும்) மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :