NATIONAL

தேசிய மாதத் தொடக்க விழாவில் 50 சதவீதம் வரை அபராதக் கட்டணக் குறைப்பு

கோலாலம்பூர், ஜூலை 19: எதிர்வரும் ஞாயிறன்று சைபர் நிகழ்வு அரங்கில் நடைபெறும் தேசிய மாதம் மற்றும் கிபார் ஜாலோர் கெமிலாங் 2024 தொடக்க நிகழ்வில் ராயல் மலேசியன் காவல்துறையின் 50 சதவீதம் வரை அபராதக் கட்டணக் குறைப்பு சலுகையை பொதுமக்கள் பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, நிகழ்ச்சித் தளத்தில் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை மட்டுமே பணம் செலுத்த முடியும் என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்நிகழ்வில் ஃபாமா மூலம் அக்ரோ மற்றும் ஏஹ்சான் ரஹ்மா மடாணி விற்பனைகளும் நடைபெறும். இதில் கோழி, மீன், இறைச்சி, முட்டை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை குறைந்த விலையில் வாங்க இயலும்.

2024 ஆம் ஆண்டு தேசிய மாதம் மற்றும் கிபார் ஜாலோர் கெமிலாங் தொடக்க விழா, “மக்கள் திருவிழா“ என்ற கருத்தை மையமாகக் கொண்டுள்ளது. இந்நிகழ்வு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களால் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கப்படும். மேலும் இது தேசிய மற்றும் தேசபக்தியின் உணர்வைத் தொடர்ந்து வளர்ப்பதற்கான ஒரு தளமாகும்.

ஆகஸ்ட் 31 அன்று புத்ராஜெயாவில் தேசிய தினம் 2024 மற்றும் செப்டம்பர் 16 அன்று சபாவில் மலேசியா தினம் 2024 கொண்டாடப்படுவதற்கான கவுண்ட்டவுனை தொடங்குவதற்காக இந்த நிகழ்வு நடத்தப்படும்

தேசிய தினம், மலேசியா தினம் 2024 கொண்டாட்டங்கள் மற்றும் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகள் பற்றிய கூடுதல் தகவல்களை www.merdeka360.my என்ற இணையதளத்தில் காணலாம்.

– பெர்னாமா


Pengarang :