NATIONAL

போதைப் பொருள் கடத்தல் வழக்கு- நான்கு ஆடவர்கள் மரண தண்டனையிலிருந்து தப்பினர்

புத்ராஜெயா, ஜூலை 19 – போதைப் பொருள் கடத்தல் வழக்கில் குற்றச்சாட்டு திருத்தப்பட்டதைத் தொடர்ந்து நான்கு இந்திய ஆடவர்கள் மரண தண்டனையிலிருந்து தப்பினர்.

மொத்தம் 2,264 கிராம் மெத்தம்ஃபெத்தமினா போதைப் பொருளை கடத்தியதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு போதைப் பொருளை வைத்திருந்ததாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து பி.சண்முக சுந்தரம் (வயது 39), எஸ்.விக்னேஸ்வரன் (வயது 41), எஸ்.சுதன் (வயது 40) மற்றும் கே.விக்னேஸ்வரன் (வயது 35) ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு 20 ஆண்டுச் சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டது.

அவர்கள் கைது செய்யப்பட்ட தினமான 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கி இந்த சிறைத்தண்டனை அமலுக்கு வரும் வேளையில் அவர்கள் அனைவருக்கும் தலா 10 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாகப் போதைப் பொருளை கடத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை வைத்திருந்ததாக மாற்றுவதற்கு தாங்கள் செய்து கொண்ட விண்ணப்பத்தை சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் ஏற்றுக் கொண்டதாக சண்முகசுந்தரம், விக்னேஸ்வரன் மற்றும் சுதன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அஃபிபுடின் அகமது ஹபிபி மூன்று நீதிபதிகள் அடங்கிய கூட்டரசு நீதிமன்றம் அமர்விடம் தெரிவித்தார்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மற்றொரு நபரான கே.விக்னேஸ்வரன் சார்பில் வழக்கறிஞர் டத்தோ ஹிஸ்யாம் தே போ தெக் ஆஜரானார்.

இதனை உறுதிப்படுத்திய அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் ஹாவ் மேய் லிங், இந்த தேர்வுக் குற்றச்சாட்டை மனுதாரர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஒப்புக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் சட்டத் துறை தலைவர் அலுவலகம் குற்றச்சாட்டை திருத்துவதற்கு ஒப்புதல் வழங்கியதாக கூறினார்.

கடந்த 2016ஆம் ஆண்டு மாலை 4.00 மணியளவில் கோம்பாக், ஜாலான் எஸ்எம்.2 சன்வே பத்து கேவ்ஸ் எனுமிடத்தில் போதைப் பொருளைக் கடத்தியதாக அந்நால்வருக்கும் எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இக்குற்றத்திற்காக உயர் நீதிமன்றம் அவர்கள் அனைவருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.


Pengarang :