NATIONAL

நூர் ஃபாரா கொலை வழக்கில் தொடர்புடைய காவல்துறை அதிகாரியின் தடுப்பு காவலை நீட்டிக்க விண்ணப்பம்

சுங்கை பூலோ, ஜூலை 19: நூர் ஃபாரா கார்தினி அப்துல்லா கொலை வழக்கில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் காவல்துறை அதிகாரியின் தடுப்பு காவலை நீட்டிக்க ராயல் மலேசியன் காவல்துறை (PDRM) விண்ணப்பிக்கும். அந்நபரின் தடுப்பு காவல் எதிர்வரும் திங்கட்கிழமை முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கு விசாரணை இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், தீர்க்கப் படாதப் பல விஷயங்கள் உள்ளன என்றும் சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் கூறினார்.

நேற்று, அக்கொலை வழக்கின் விசாரணைக்கு உதவுவதற்காக 26 சாட்சிகளிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டதாகப் பெர்னாமா தகவல் வெளியிட்டது.

ஜூலை 10 ஆம் தேதி அன்று வாடிக்கையாளருக்கு வாடகைக் காரை வழங்கிய பின்னர் நூர் ஃபாரா கார்தினி காணாமல் போனதாகக் கூறப்படுகிறது, மேலும் அவரது உடல் திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, குற்றவியல் சட்டப்பிரிவு 302 இன் கீழ் வழக்கு தொடர்பான விசாரணையில் உதவுவதற்காகப் பேராக்கில் பணிபுரியும் காவல்துறை அதிகாரியான 26 வயது நபர் கைது செய்யப்பட்டு ஜூலை 22 வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.

– பெர்னாமா


Pengarang :