NATIONAL

இணைய பகடிவதையைத் தடுக்க சிறப்பு செயல் குழு – அமைச்சர் ஃபாஹ்மி தகவல்

கோலாலம்பூர், ஜூலை 19 – இந்நாட்டில் இணைய பகடிவதைப் பிரச்சினையைக் கையாள சிறப்பு செயல்குழு  ஒன்றை அமைக்க இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டதாக தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.

இந்த சிறப்புச் செயல்குழுவில் தொடர்புத்துறை அமைச்சு, உள்துறை அமைச்சு, டிஜிட்டல் அமைச்சு மற்றும் பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவு ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடம் பெற்றிருப்பர் என்று ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளருமான அவர் சொன்னார்.

மேலும், தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், அரச மலேசிய போலீஸ் படை மற்றும் சட்டத் துறை தலைவர் அலுவலகம் ஆகியவையும் இந்த செயல்குழுவுக்கு துணையாகச் செயல்படும் என அவர் குறிப்பிட்டார்.

இணைய பகடிவதையைத் தடுக்க சமூக ஊடகத் தளங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை தேவை என அமைச்சரவை கருதுகிறது. இணைய ஊடக நடத்துநர்கள் தங்கள் பொறுப்பிலிருந்து நழுவக்கூடாது என்பதோடு இப்பிரச்சினையை களைவதில் இணைந்து செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

ஆகவே, நாங்கள் (சிறப்புச் செயல்குழு) இணைய பகடிவதைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தேவையானவை என கருதும் நடவடிக்கைகளை குறிப்பாக, சட்டத்தை ஆய்வு செய்வது, திருத்தங்களைச் செய்வது உள்ளிட்டவற்றை மேற்கொள்வோம் என அவர் சொன்னார்.

இஸ்தானா நெகாராவில் 17வது மாமன்னரின் அரியணை அமரும் விழாவை முன்னிட்டு இன்று நடைபெற்ற மரியாதை அணிவகுப்பு ஒத்திகையைப் பார்வையிட்டப் பின்னர் அந்த முடிசூட்டு விழாவுக்கான சிறப்பு ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

இத்தகைய செயல்குழு மற்றும் சிறப்பு குழுவை அமைப்பது மிகவும் முக்கியம் எனக் கூறிய அவர், அக்குழுக்கள் தங்களிடமுள்ள நிபுணத்துவத்தை முழுமையாகப் பயன்படுத்தும் அதேவேளையில் அமைச்சகள் மற்றும் அரசு துறைகள் என்ற எல்லைகளைத் தாண்டியும் செயல்பட முடியும் என்று ஃபாஹ்மி குறிப்பிட்டார்.


Pengarang :