NATIONAL

வங்காளதேசத்திலுள்ள அனைத்து மலேசியர்களும் தாயகம் கொண்டு வரப்படுவர் – பிரதமர்

கோலாலம்பூர், ஜூலை 22 – வங்கதேசத்தில் பதற்றம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்நாட்டிலுள்ள  அனைத்து மலேசியர்களையும் தாயகம் அழைத்து வர அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

வங்களாதேசத்தின்  சமீபத்திய மேம்பாடுகளைக் கவனத்தில் கொண்டப் பின்னர்
மலேசியர்களின் பாதுகாப்புக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும் வகையில்   இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அரசாங்க ஆதரவிலான மாணவர்கள் அல்லது தனியார் மாணவர்களாக இருந்தாலும் நாங்கள் அவர்களுக்கு உதவுவோம். அவர்களை அழைத்து வர விமானத்தை வாடகைக்கு எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால்  வெளியுறவுத்துறை அமைச்சர்  அதற்கான கூட்டத்தை நடத்துவார் என அவர் குறிப்பிட்டார்.

மலேசியர்களின் பாதுகாப்பு எங்களின் முன்னுரிமை. முதல் சில நாட்கள்  நிலைமை கட்டுக்குள் இருப்பதாகத் தோன்றியது. ஆனால் இப்போது, தூதரகத்தின் தகவலின் அடிப்படையில் மலேசியர்களை  திரும்பக் கொண்டு வருவது மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது  என்று  இன்று இங்கு தேசிய வரி மாநாட்டை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

இதனிடையே, உடனடி வெளியேற்றத் திட்டத்திற்கு பிரதமர்  பச்சைக் கொடி காட்டியப் பின்னர்  வங்காளதேசத்தில் உள்ள அனைத்து மலேசியர்களையும் அரசாங்கம் தாயகம்  அழைத்து வரும் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது  ஹசன் இன்று நடைபெற்றச் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.


Pengarang :