NATIONAL

சபாவின் இறையாண்மை  தற்காப்போம்; நாட்டின் நலனைப் பாதுகாப்போம்- மலேசியா உறுதி

புத்ராஜெயா, ஜூலை 30 – நாட்டின்  முக்கிய பகுதியாக விளங்கும்  சபாவின் இறையாண்மையை மலேசியா தொடர்ந்து தற்காக்கும் அதேவேளையில் அதன் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் நாட்டின் நலன்கள் எப்போதும் பாதுகாக்கப்படுவதை   உறுதி செய்யும்.

சபா மலேசியாவின் முக்கிய பகுதியாக இருக்கும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளியுறவு அமைச்சு (விஸ்மா புத்ரா) நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மறுவுறுதிப்படுத்தியது.

சபா மீது வைக்கப்படும் எந்தவொரு கோரிக்கையையும் மலேசியா ஒருபோதும் ஒப்புக்கொள்ளவும் இல்லை அங்கீகரிக்கவும் இல்லை என்று அது குறிப்பிட்டது.

கடந்த 1963ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி மலேசிய கூட்டமைப்பு உருவானதிலிருந்து சபாவை மலேசியாவின் ஒரு பகுதியாக ஐக்கிய நாடுகள் சபையும் (ஐ.நா.) அனைத்துலகச்  சமூகமும் அங்கீகரித்துள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1962 ஆம் ஆண்டு  மலேசியா உருவாக்கம் தொடர்பில்  சபா மக்கள் கொபோல்ட் மன்றம்  மூலம் தங்கள் சுயநிர்ணய உரிமைக்கான கடமையை நிறைவேற்றியதாக  வெளியுறவு அமைச்சு  குறிப்பிட்டது.

மலேசியாவின் ஒரு முக்கிய அங்கமான சபாவின் இறையாண்மையை மறுக்கும் வகையிலான  அடிப்படையற்ற மற்றும் தவறான உள்ளடக்கத்தைக் கொண்ட காணொளிகள்  சமூக ஊடகங்களில்  பரவுவது அமைச்சின் கவனத்திற்கு வந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக வெளியுறவு அமைச்சு அரசுத் துறைகளின் ஒத்துழைப்புடன்   இணைந்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது என்று அது குறிப்பிட்டது.


Pengarang :