NATIONAL

லங்காவியில் உரிமம் இல்லாத வாடகை வாகன சேவைகளைப் பயன்படுத்த வேண்டாம் – ஜேபிஜே

அலோர் ஸ்டார், ஜூலை 30: லங்காவியில் இயங்கும் உரிமம் இல்லாத வாடகை வாகன சேவைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று சாலைப் போக்கு வரத்துத் துறை (ஜேபிஜே) பொதுமக்களுக்கு நினைவூட்டுகிறது.

உரிமம் இல்லாத வாகனங்களை வாடகைக்கு எடுப்பது ஆபத்துக்களை விளைவிக்கலாம். ஏனெனில் சாலையில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் பயனர்களுக்குக் காப்பீட்டின் பயன் கிடைக்காது என ஜேபிஜே தலைவர் ஜெனரல் ஏடி ஃபேட்லி ரம்லி கூறினார்.

“உரிமம் இல்லாத வாகனங்களை பயன்படுத்துவோருக்கு காப்பீடு கிடைக்காது. அதனால் ஏதேனும் விபத்து நடந்தால் காப்பீடு பெற முடியாது. காப்பீடு இல்லாமல் வாகனத்தை பயன்படுத்தினால் அதுவே மிகப்பெரிய ஆபத்து.

லங்காவியில் வாகனங்களை வாடகைக்கு விடுவது எங்களுக்குத் தெரியும். சரியான தளங்களை பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் மேல் குறிப்பிட்ட செயல்களுக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.

லங்காவி தீவில் 1000க்கும் மேற்பட்ட உரிமம் இல்லாத வாடகை வாகனங்கள், குறிப்பாகக் கார்கள் இருப்பது குறித்து முந்தைய நாளிதழில் வெளியான செய்தி குறித்து கருத்து கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

ஜேபிஜே தொடர்ந்து கண்காணித்து, தவறான செயல்பாடுகளை எதிர்த்துப் அவ்வப்போது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார்.

“நாங்கள் ஏன் லங்காவியில் நடவடிக்கை எடுக்கிறோம் என்று உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். அனுமதி பெற்ற டாக்சி சங்கங்களின் புகார்களே இதற்குக் காரணம். எனவே புகார் வந்தால் நடவடிக்கை எடுப்போம், புகாரைப் பெறாமல் தன்னிச்சையாகப் பொறுப்பற்ற முறையில் நடவடிக்கை எடுப்பதில்லை,“ என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :