NATIONAL

நாட்டின் வட எல்லையில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த வெ.10 கோடி கூடுதல் ஒதுக்கீடு

புத்ராஜெயா, ஜூலை 30 – கெடா, பெர்லிஸ் மற்றும் கிளந்தான்
மாநிலங்களை உட்படுத்திய நாட்டின் வட எல்லைப் பகுதியில் பாதுகாப்பு
வசதிகளை மேம்படுத்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பத்து
கோடி வெள்ளி கூடுதல் ஒதுக்கீட்டை அங்கீகரித்துள்ளார்.

நாட்டில் குறிப்பாக வட எல்லைப் பகுதியில் பெரும்பாலான பாதுகாப்பு
வசதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு
சீரமைப்பு பணிகளுக்கான மேலாண்மை மற்றும் நிதி ஒதுக்கீட்டு
நடவடிக்கைகளை விரைவுபடுத்தும்படி தாம் உத்தரவிட்டுள்ளதாக அன்வார்
சொன்னார்.

தீகபற்ப மலேசியாவின் வட பகுதியில் தரம் உயர்த்தும் பணிகளை
மேற்கொள்ள் வேண்டிய அவசியம் உள்ளது. வரும் ஆகஸ்டு 3ஆம் தேதி
நான் தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தாவிஷினை கோலாக் மற்றும்
ரந்தாவ் பாஞ்சாங்கில் சந்திக்கவிருக்கிறேன்.

எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்துவது மற்றும் தாய்லாந்து-மலேசிய
வட எல்லையில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு புத்துயிரூட்டுவது
குறித்து இச்சந்திப்பில் நாங்கள் விவாதிக்கவிருக்கிறோம் என்று அவர்
குறிப்பிட்டார்.

இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதியின் நடப்பு மேம்பாடு
தொடர்பான அறிக்கையை எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறும்
அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யும்படி தாம் பணித்துள்ளதாக
அவர் கூறினார்.

இன்று இங்கு 2024 தேசிய பாதுகாப்பு மாத நிகழ்வைத் தொடக்கி வைத்து
உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின், டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, தேசிய பாதுகாப்பு தலைமை இயக்குநர் டத்தோ ராஜா நுஷிர்வான் ஜைனால் அபிடின் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்தோனேசியாவின் புதிய தலைநகர் உருவாக்கத்தின் எதிரொலியாக
சரவா-கலிமந்தான் எல்லையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 100
கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கடந்த ஜனவரி 20ஆம்
தேதி அறிவித்திருந்தது.


Pengarang :