NATIONAL

இருமல் மருந்து கலந்த ஐஸ்கிரீமை விற்பனை செய்ய  சுகாதார அமைச்சு தடை

புத்ராஜெயா, ஜூலை 31 –  பாரம்பரிய இருமல் மருந்தான ‘பேய் பா கோவா’ (சாப் இபு டான் அனாக்) கலந்த ஐஸ்கிரீமை விற்கும் அனைத்து கடைகளும் அந்த உணவுப் பொருளின் விற்பனையை உடனடியாக நிறுத்தும்படி  சுகாதார அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பயனீட்டாளர்கள் மற்றும் பொது மக்களின் உடலாரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில்  அமைச்சு இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

சிரிஞ்ச் மூலம் பேய் பா கோவா இருமல் மருந்து   செலுத்தப்பட்ட ஐஸ்கிரீம் தயாரிப்பு தொடர்பான செய்தி  சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து  உணவு பாதுகாப்பு மற்றும் தரத் திட்ட மதிப்பாய்வின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று அமைச்சு கூறியது.

மருந்துடன் உண்ணக்கூடிய பொருட்களில் கலப்படம் செய்வது மற்றும் கலப்படம் செய்யப்பட்ட  உணவை தயாரிப்பது அல்லது விற்பதை  1983ஆம் ஆண்டு உணவுச் சட்டத்தின் 13B (2) பிரிவு  தடை செய்கிறது. இச்சட்டப் பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20,000 வெள்ளி வரையிலான  அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

அனைத்து உணவுப் பொருட்களும் 1983ஆம் ஆண்டு   உணவுச் சட்டம்  மற்றும் அதன் கீழ் உள்ள விதிமுறைகளுக்கு உட்படுவதை  உணவுத் தொழில்துறையினர் உறுதிசெய்ய வேண்டும்  என்று அமைச்சு ஒரு அறிக்கையில் வலியுறுத்தியது.

உணவுப் பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்கும் அதேவேளை  உண்பதற்குப் பொருத்தமற்ற அல்லது பாதுகாப்பற்ற பொருட்கள் கலக்கப்பட்ட  உணவுப் பொருட்களை வாங்கும் போது கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தியது.


Pengarang :