NATIONAL

நிலத்தை விரைந்து துப்புரவு செய்வீர்- சட்டவிரோதக் குப்பை எரிப்பு மைய உரிமையாளர்களுக்கு உத்தரவு

ஷா ஆலம், ஜூலை 31- இம்மாதம் 22ஆம் தேதி தொடங்கி 120
நாட்களுக்குள் நிலத்தை சுத்தம் செய்யும்படி கோல லங்காட், ஜாலான்
சிஜங்காங் அருகில் சட்டவிரோதக் குப்பை எரிப்பு மையமாகச் செயல்படும்
நிலத்தின் உரிமையாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய நிலச் சட்டத்தின் (சட்டம் 828) 128வது பிரிவுக்கேற்ப 7ஏ
அறிக்கையை கோல லங்காட் மாவட்ட நில அலுவலகம் சம்பந்தப்பட்ட
நில உரிமையாளருக்கு வழங்கியுள்ளதாக சுற்றுச்சூழல் துறைக்கான
ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

விவசாய நிலத்தை குப்பைகளைச் சேகரிக்கும் மற்றும் அழிக்கும்
மையமாகப் பயன்படுத்தியதன் மூலம் அந்த நில உரிமையாளர் 7ஏ
அறிக்கையின் நிபந்தனைகளை மீறி விட்டதாக அவர் தெரிவித்தார்.

அந்த 7ஏ அறிக்கையில் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளை நில
உரிமையாளர் பின்பற்றத் தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிலத்தைப்
பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கையை மாநில அரசு எடுக்கும் என்று
அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.

அந்த மையத்தில் மின்கழிவுகள் அல்லாமல் வர்த்தக மற்றும் தொழிலியல்
துறை சார்ந்த திடக்கழிவுகள் மட்டுமே கொட்டப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட
பகுதியில் அடிக்கடி தீயிடல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவது
விசாணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேற்று தாம் மேற்கொண்ட வருகையைத்
தொடர்ந்து கோல லங்காட் நகராண்மைக் கழகம் அந்த மையத்தில்
அடிக்கடி சோதனைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளதோடு புதிதாக
குப்பைக் கொட்டும் நடவடிக்கையை கண்காணிப்பதற்காக கண்காணிப்பு
கேமராக்களையும் பொருத்தியுள்ளது என்றார் அவர்.

இங்கு கொட்டப்படும் குப்பைகள் வர்த்தக மற்றும் தொழில்துறை
சார்ந்தவையாக உள்ளதால் இவ்விவகாரம் ஊராட்சி மன்றங்களுக்கான
ஆட்சிக்குழுவின் கவனத்திற்கும் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது என்று
ஜமாலியா சொன்னார்.


Pengarang :