NATIONAL

கோடிவெ. 11  கையூட்டு தொடர்பில் ‘டத்தோ’ உட்பட மூவர் கைது – எம்.ஏ.சி.சி. நடவடிக்கை

புத்ராஜெயா, ஜூலை 31 – வீடமைப்புத்  திட்டம் தொடர்பில் சுமார் 11 கோடி வெள்ளி  லஞ்சம் பெற்றதாக செய்யப்பட்ட புகாரின் பேரில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.)  ஒரு டத்தோ உள்பட மூவரைக் கைது செய்துள்ளது.

நாற்பது  முதல் 60 வயதுக்குட்பட்ட அந்த மூன்று ஆடவர்களும்  நேற்று மாலை 6.30 மணியளவில்  இங்குள்ள எம்ஏசிசி தலைமையகத்திற்கு வந்த போது கைது செய்யப்பட்டனர்.

“டத்தோ’ அந்தஸ்து கொண்ட நபர் எஸ்.பி.என்.பி. எனப்படும்  தேசிய வீடமைப்பு நிறுவனத்திற்குச் சொந்தமான துணை நிறுவனத்தின்  முன்னாள் அதிகாரி ஆவார்.

வாக்குமூலம் வழங்க வந்த மற்றொரு  நபரும் வாக்குமூலம்  பதிவுசெய்யப்பட்ட பின்னர் எம்.ஏ.சி.சி. ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்று  வட்டாரம் ஒன்று தெரிவித்தது.

எஸ்.பி.என்.பி. இயக்குநர்கள் குழுவின் ஒப்புதலின்றி குவாந்தான் மக்கள்  வீடமைப்பு மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான கூடுதல் மேம்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக அனைத்து சந்தேக நபர்களும் கட்டுமான நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றதாக நம்பப்படுகிறது என வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

கையொப்பமிடப்பட்ட அந்த  ஒப்பந்தத்தில்  ஒரு சார்பான உட்பிரிவுகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இதனால் எஸ்.பி.என்.பி. நிறுவனம்  பல்லாயிரக்கணக்கான வெள்ளி  இழப்புகளை எதிர்நோக்கியது.

புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம்  எம்.ஏ.சி.சி.யின் கோரிக்கையை ஏற்று அனைத்து சந்தேக நபர்களையும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்க அனுமதி வழங்கியது.


Pengarang :