NATIONAL

இஸ்மாயில்  ஹனியே படுகொலை- உலகத் தலைவர்கள் கண்டனம்

கோலாலம்பூர், ஜூலை 31-  ஹமாஸ்  தேசியத் தலைவரும்  அதன் அரசியல் அமைப்பின் தலைவருமான இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கு உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்தன.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் அதன் அரசியல் பிரிவின் தலைவர் கொல்லப்பட்டதாக ஹமாஸ்  அமைப்பை மேற்கோள் காட்டி அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாங்கள் ஹனியே கொல்லப்பட்டதைக் கண்டிக்கிறோம்.இப் பிராந்தியத்தில் உலகளாவிய கவலை மற்றும் ஆபத்து அதிகரிப்பதற்கான அபாயத்தைக் காண்கிறோம் என்று  லெபனான் பிரதமர் நஜிப் மிகடி கூறியதாக இர்னா எனப்படும் இஸ்லாமிய குடியரசு செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இதனிடையே, இந்த கொடூரமான கொலைக்கு கண்டனம் தெரிவித்த  துருக்கிய வெளியுறவு அமைச்சு, தங்கள் சொந்த நாட்டில் நிம்மதியாக வாழ்வதற்கு உயிர்த் தியாகம் செய்த ஹனியே போன்ற லட்சக்கணக்கான   பாலஸ்தீன  மக்களுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவிக்கிறோம் என் கூறியது.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேலிய அரசாங்கம் அமைதியை  விரும்பவில்லை என்பதை ஹனியேவின் கொலை மீண்டும் காட்டுகிறது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துலகச் சமூகம் இஸ்ரேலை தடுத்து நிறுத்துவதற்கு  நடவடிக்கை எடுக்காவிட்டால் இப்பிராந்தியம் பெரும் மோதலை சந்திக்க நேரிடும் என்றும் அமைச்சு எச்சரித்தது.

பாலஸ்தீன மக்களின் நியாயமான போராட்டத்திற்கு துருக்கி தொடர்ந்து ஆதரவளிக்கும். ஹனியே கொல்லப்பட்டது காஸாவிற்கு அப்பால் பிராந்திய அளவில் மோதலை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அந்த அறிக்கை மேலும் கூறியது.

இந்த படுகொலையை பாலஸ்தீன அதிபர் மாமுட் அப்பாஸ் வன்மையாகக்  கண்டித்தோடு இது ஒரு கோழைத்தனமான, ஆபத்தான செயல் என வர்ணித்தார்.

பாலஸ்தீன மக்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதில் ஒற்றுமையாகவும் பொறுமையாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும் என்று அவர் கூறியதாக  பாலஸ்தீன செய்தி நிறுவனம் (வாஃபா) தெரிவித்தது.

பாலஸ்தீன விடுதலை அமைப்பின் (பிஎல்ஓ) நிர்வாகக் குழுவின் பொதுச் செயலாளர் ஹுசைன் அல்-ஷேக்கும் இந்த கொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.


Pengarang :