NATIONAL

கணவரால் கழுத்து நெறிக்கப்பட்டு பள்ளத்தில் தள்ளப்பட்ட மனைவி பொது மக்கள் உதவியுடன் மீட்பு

ஈப்போ, ஆக 1- கருத்து வேறுபாடு காரணமாக மனைவியின் கழுத்தை
நெறித்தக் கணவர் அவரை பள்ளத்தில் தள்ளி கொல்லவும் முயன்றுள்ளார்.

கணவரின் இந்த கொடூரத் தாக்குதலிலிருந்து தெய்வாதீனமாக
உயிர்த்தப்பிய மனைவி பொது மக்களின் உதவியுடன் மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் இங்குள்ள தீமோர் பாராட் விரைவுச் சாலையில் கடந்த
சனிக்கிழமை நிகழ்ந்ததாக கிரீக் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஜூல்கிப்ளி மாமுட் கூறினார்.

முப்பத்தொன்பது வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழி 32 வயதான தன்
மனைவியை கோலாலம்பூரிலுள்ள பணியிடத்திலிருந்து காரில் ஏற்றிக்
கொண்டு நெடுஞ்சாலை வழியாக ஈப்போ நோக்கி புறப்பட்டதாக அவர்
சொன்னார்.

பயணத்தின் போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
காரை ஓரிடத்தில் நிறுத்திய அந்த ஆடவர் கத்தியைக் காட்டி கொலை
செய்யப்போவதாக தன் மனைவியை மிரட்டியுள்ளார். தன்னை ஒன்றும்
செய்ய வேண்டாம் என மனைவி கெஞ்சிய நிலையில் அவரின் கழுத்தை
அவ்வாடவர் நெறித்துள்ளார் என ஜூல்கிப்ளி தெரிவித்தார்.

காரிலிருந்து குதித்து தப்ப முயன்ற அப்பெண்ணைத் தடுத்த அவ்வாடவர்
விடியற்காலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை அந்த நெடுஞ்சாலையில்
பயணித்துள்ளார் என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.

இருவருக்குமிடையிலான வாக்குவாதம் முற்றிய நிலையில் சம்பவ
இடத்தில் காரை நிறுத்திய கணவர் தன் மனைவியை காரிலிருந்து
வெளியே இழுத்துள்ளார். சாலையோரத்தில் இருவருக்குமிடையே
தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் அவ்வாடவர் அப்பெண்ணை பள்ளத்தில்
தள்ளியுள்ளார் என்றார் அவர்.

அப்பெண் பள்ளத்திலிருந்து மேலே ஏறி வந்து உதவிக்காக காத்திருந்த
நிலையில் கடந்த 27ஆம் தேதி பிற்பகல் 2.00 மணியளவில் பொது மக்கள்
அவரைக் கண்டு காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர் என்று அவர்
குறிப்பிட்டார்.

உடலில் சிராயப்புக் காயங்கள் மற்றும் வீக்கத்திற்குள்ளான அந்த பெண்
சிகிச்சைக்காகக் கிரீக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று அவர்
சொன்னார்.

விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகப் பேர்வழிக்கு
போதைப் பொருள் தொடர்பில் முந்தையக் குற்றப்பதிவுகள் உள்ளது
தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார் அவர்.


Pengarang :