SELANGOR

மாணவர்களுக்கு மின் சிகிரெட்டுகள் விற்பதைத் தடுக்கும் பரிந்துரை அரசிடம் சமர்ப்பிக்கப்படும்- பாப்பாராய்டு

ஷா ஆலம், ஆக 5-  மாணவர்கள் மத்தியில் மின் சிகரெட் (வேப்) விற்பனையை கட்டுப்படுத்தும் பரிந்துரை  மாநில ஆட்சிக்குழு  கூட்டத்தில் கொண்டு வரப்படும்.

திரங்கானுவில் நான்காம் படிவ மாணவர் ஒருவர் மின் சிகிரெட் புகைத்ததால்  ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த பரிந்துரை முன்வைக்கப்படவுள்ளதாக மனிதவளத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாபாபாராய்டு கூறினார்.

அனைத்து அரசுத் துறைகள்,  ஊராட்சி அமைப்புகள் மற்றும் அமலாக்கத் துறைகள்  மின்சிகிரெட்டுகளை  மாணவர்களுக்கு விற்பனை செய்வதைக் கட்டுப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.  மின் சிகிரெட் புகைப்பதால் மாணவர்களுக்கு எந்தப் பயனும் தராது  என்பதோடு அவர்களின் கற்றல் நடவடிக்கைக்கும் உதவாது என அவர் சொன்னார்.

பல இடங்களில் புகைபிடிப்பதைத் தடைசெய்யும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் விற்பனை  தொடர்பான அமலாக்கம் கடுமையாக்கப்பட வேண்டும்.  இது ஒரு நடைமுறையாக இல்லாமலிருப்பதற்காக  மின் சிகிரெட்  விற்பனையை மறுபரிசீலனை செய்ய பரிந்துரைக்கிறோம் என்று அவர் கூறினார்.

நேற்று இங்குள்ள அரசு தலைமைச் செயலகத்தில்  பைக்கேர்-1000 திட்டத்தின் கீழ் 200 பேருக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வில்  அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் மற்றும் ஊராட்சித் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சூயி லிம் ஆகியோருடன் விவாதிக்கப்படும் என்றும் பாப்பாராய்டு தெரிவித்தார்.

வேப்பிங்  எனப்படும் இந்த பழக்கம் புகைக்கும் கலாச்சாரத்திற்கு வழிவகுக்கும்.  அதை மாணவர்களுக்கு விற்கும் விற்பனையாளர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூகத்திற்கு  குறிப்பாக இந்த பழக்கத்தால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு உதவுவதற்காக இந்த விஷயம் குறித்து தொடர்புடைய இரண்டு ஆட்சிக்குழு உறுப்பினர்களுடன் நான் விவாதிப்பேன் என்று அவர் கூறினார்.

அண்மையில், திரங்கானு,  கெமாமானில்  உள்ள ஒரு பள்ளியில் மின் சிகிரெட் புகைத்ததாக நம்பப்படும்  மாணவர் ஒருவர் சுயநினைவை இழந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன .


Pengarang :