SELANGOR

மாநில அரசின் 21,000 ஊழியர்களுக்கு சம்பள உயர்வு- மந்திரி புசார் அறிவிப்பு

ஷா ஆலம், ஆக 5- இவ்வாண்டு மே மாதம் 1ஆம் தேதி பிரதமர் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் மாநிலத்திலுள்ள 21,000 அரசு ஊழியர்கள் சம்பள உயர்வைப் பெறவுள்ளனர்.

மத்திய அரசு நிர்ணயித்துள்ள விகிதாசாரத்துக்கு ஏற்ப இந்த சம்பள உயர்வு அமையும் எனக் கூறிய மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, அதன் தொடர்பான அறிவிப்பு ஆகஸ்ட் 16 ஆம் தேதி வெளியிடப்படும் என்றார்.

இவ்விவகாரத்தில் நாங்கள் மத்திய அரசை பின்பற்ற விருக்கிறோம். அவர்கள் நிர்ணயிக்கும் சம்பள உயர்வு விகிதாசாரத்தை பார்க்கவிருக்கிறோம். நம்மிடம் உள்ள நிதிக் கையிருப்பின் அடிப்படையில் சம்பள உயர்வு வழங்க முடியும் என்றார் அவர்.

இன்று இங்குள்ள ஜூப்ளி பேராக் அரங்கில் மாநில அளவிலான தேசிய  கொடியை பறக்கவிடும் இயக்கத்தை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு மறுசீரமைப்பின் வாயிலாக 13 விழுக்காட்டுக்கும் மேல் சம்பள உயர்வை பொதுச்சேவை துறையினர் பெறுவர் என்று இவ்வாண்டு தொழிலாளர் தின நிகழ்வில் பிரதமர் அறிவித்தார்.

நாட்டின் வரலாற்றில் அறிவிக்கப்ட்ட மிக அதிகமான சம்பள உயர்வு இதுவாகும் எனவும் அவர் கூறினார். கடந்த  2013ஆம் ஆண்டு ஆகக் கடைசியாக அரசு ஊழியர்களுக்கு சுமார் 13 விழுக்காடு சம்பள உயர்வு வழங்கப்பட்டது.

இந்த புதிய சம்பள  உயர்வு விகிதாசாரத்தை பிரதமர் அன்வார் வரும் ஆகஸ்டு 16ஆம் தேதி புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் அறிவிப்பார் என்று பொதுச் சேவைத் துறை தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ வான் அகமது டாஹ்லான் அப்துல் அஜிஸ் கடந்த ஜூலை 18ஆம் தேதி கூறியிருந்தார்.


Pengarang :