SELANGOR

ஸ்ரீ மூடாவில் வெள்ளத்தைத் தடுக்க கூடுதல் நீர் இறைப்பு இயந்திரங்கள்- ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் தகவல்

கிள்ளான், ஆக 5 – தாமான் ஸ்ரீ மூடாவிலுள்ள வெள்ளத் தடுப்பு மதகு அருகே பொருத்தப்பட்டுள்ள  மூன்று புதிய நீர் இறைப்பு  பம்புகள்  மூலம் ஐந்து மடங்கு வேகமாக தண்ணீரை வெளியேற்ற முடியும். இதன் வழி அருகே உள்ள பகுதிகளில் வெள்ள அபாயத்தை குறைக்க இயலும்.

சுமார் 71 லட்சம் வெள்ளி மதிப்புள்ள  இந்த  பாம்புகள்  ஒட்டுமொத்தமாக வினாடிக்கு 5,100 லிட்டர் நீரை இறைத்து வெளியேற்றும் ஆற்றல் கொண்டவையாகும்.  இவற்றைப் பொருத்தும் பணி   கடந்த மே மாதம் முற்றுப் பெற்றது.

இந்த இயந்திரங்கள் அனைத்து குப்பைகளையும் அடைபடாமல் உறிஞ்சி வெளியேற்றும் திறன் கொண்டவை என்று உள்கட்டமைப்பு மற்றும் விவசாயத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹாஷிம் கூறினார்.

தற்போது உள்ள மூன்று பம்புகளுக்கு உபரியாக இந்த இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.  நீண்ட காலத்திற்கு திறமையாக செயல்படக்கூடிய இந்த இயந்திரங்கள் கனமழை பெய்யும் படசத்தில்  அதிகப்படியான தண்ணீரை திருப்பிவிடும் ஆற்றலைக் கொண்டுள்ளன என்று அவர் சொன்னார்.

தாமான் ஸ்ரீ மூடா மதகில்  உள்ள பம்ப்களின் மொத்த கொள்ளளவு இப்போது வினாடிக்கு சுமார் 6,000 லிட்டராகும். தாமான் ஸ்ரீ மூடா தாழ்வான பகுதி என்பதால்  இங்கு அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தை கருத்தில் கொண்டு இப்பகுதி மீது எப்போதும் கவனம் செலுத்தப்படுகிறது.

புதிய பம்புகளின் திறன்  வேகமானது. மேலும் குப்பைகளும்  தேங்காது. மற்ற  சாதாரண பம்ப்களில் குப்பைகள் அடைப்பை ஏற்படுத்தும். தவிர, இது நீண்ட காலத்திற்கு பயன்படுத்த கூடியதாகும் என்று அவர் இன்று கூறினார்.

முன்னதாக, விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரும்  கோத்தா ராஜா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான  டத்தோஸ்ரீ முகமது சாபுவுடன் இணைந்து இஷாம் அந்த நீர் இறைப்பு இயந்திரத்தை திறந்து வைத்தார்.

இதற்கிடையில்,  கடந்த  2021ஆம் ஆண்டு  ஜூலை 1ஆம் தேதி  தொடங்கப்பட்ட திட்டம் கடந்த ஆண்டு மே 26 அன்று நடைமுறை நிறைவுக்கான சான்றிதழைப் பெற்றதாக
சிலாங்கூர் மாநில  நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை இயக்குனர் நாசர் சலீம் தெரிவித்தார்.

அசல் அட்டவணைப்படி இந்த திட்டம் கடந்தாண்டு  ஜூலை 1ஆம் தேதி  முடிக்கப்பட வேண்டும். ஆனால் கோவிட்-19  நோய்த் தொற்று காரணமாக  அமல்படுத்தப்பட்ட நடமாட்ட  கட்டுப்பாட்டு ஆணை மற்றும் 2021ஆம் ஆண்டு   டிசம்பர் 18ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளப் பேரிடர்   உள்ளிட்ட பல காரணங்களால் அத்திட்டம் தாமதமானது என்று அவர் கூறினார்.

சிலாங்கூரில் ஆறு வெளிநாட்டினர் உட்பட 25 உயிர்களைக் பலிகொண்ட 2021  டிசம்பர்  வெள்ளப் பேரிடரில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில்  தாமான் ஸ்ரீ மூடாவும்  ஒன்றாகும்.


Pengarang :