NATIONAL

உணவகத்தில் கத்திக் குத்துக் காயங்களுடன் அந்நிய ஆடவரின் சடலம் மீட்பு- ஒன்பது பேர் கைது

பாலிக் பூலாவ், ஆக 6- ஜாலான் புக்கிட் கெந்திங்கிலுள்ள தாய்லாந்து
உணவகம் ஒன்றில் கத்திக் குத்துக் காயங்களுடன் அந்நியப் பிரஜை என
நம்பப்படும் ஆடவரின் சடலம் நேற்று விடியற்காலை மீட்கப்பட்டது.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் நேற்று விடிற்காலை 3.15
மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகப் பினாங்கு மாநில
போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அகமது கூறினார்.

கத்திக் குத்துக் காயங்கள் காரணமாக அவ்வாடவர் உயிரிழந்திருக்கலாம்
என்பதை தொடக்கக் கட்ட விசாரணைகள் காட்டுகின்றன. கொலை
செய்யப்படுவதற்கு முன்னர் அவ்வாடருக்கும் அந்த உணவகத்தில் வேலை
செய்யும் இதர அந்நிய நாட்டு ஊழியர்களுக்கும் இடையே கைகலப்பு
ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இச்சம்பவத்தில் தொடர்புடைய
சந்தேகப் பேர்வழிகளைக் கைது செய்யும் நடவடிக்கையில் மாநில
போலீசார் ஈடுபட்டனர் என்று அவர் தெரிவித்தார்.

ஓப் கெஜாம் கெந்திங் எனும் அச்சோதனை நடவடிக்கையின் வாயிலாக
எட்டு அந்நிய நாட்டினரும் ஒரு உள்நாட்டு ஆடவரும் விசாரணைக்காக
தடுத்து வைக்கப்பட்டனர் என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

இருபது முதல் 35 வயது வரையிலான அந்த ஒன்பது பேரையும் கைது
செய்ததன் மூலம் இந்த கொலைச் சம்பவத்திற்கு 12 மணி நேரத்தில் தீர்வு
காணப்பட்டது எனத் தாங்கள் நம்புவதாக அவர் சொன்னார்.

அதிருப்தி காரணமாக இந்த கொலை நிகழ்ந்துள்ளதாகக் கூறிய அவர்,
இதன் தொடர்பில் விசாரணை அறிக்கையைத் தயாரிப்பதற்காக தாங்கள்
தொடர் விசாரணையை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

கைதான அந்த ஒன்பது பேரும் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின்
கீழ் விசாரணைக்காக எதிர்வரும் ஆகஸ்டு 11ஆம் தேதி வரை தடுத்து
வைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.


Pengarang :