NATIONAL

போலீஸ் சோதனையில் மூவர் கைது- 13 கேபிள் திருட்டுச் சம்பவங்களுக்குத் தீர்வு

நிபோங் திபால், ஆக 6- கேபிள் எனப்படும் மின்கம்பி திருட்டில்
ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று ஆடவர்களை பினாங்கு போலீசார்
கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கையின் வாயிலாக செபராங்
பிறை உத்தாரா மற்றும் செபராங் பிறை செலாத்தான் மாவட்டங்களில்
நிகழ்ந்த 13 கேபிள் திருட்டுச் சம்பவங்களுக்குத் தீர்வு காணப்படுள்ளதாகப்
போலீசார் நம்புகின்றனர்.

நேற்று விடியற்காலை 4.25 மணியளவில் ரோந்துப பணியில் ஈடுபட்டிருந்த
நிபோங் திபால் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த குழு ஒன்று
சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட மிட்சுபிஷி ட்ரைட்டோன் ரக
வாகனத்தை தடுத்து நிறுத்தியதாகப் பினாங்கு மாநில போலீஸ் தலைவர்
டத்தோ ஹம்சா அகமது கூறினார்.

மூவர் பயணம் செய்த அந்த வாகனத்தை சோதனையிட்ட போலீசார்
அதில் கேபிள்களைத் திருடுவதற்குப் பயன்படுத்தப்படும் பல்வேறு
உபகரணங்கள் இருப்பதைக் கண்டதாக அவர் அறிக்கை ஒன்றில்
தெரிவித்தார்.

பிடிபட்ட அந்த மூவரும் 31 முதல் 33 வயதுக்குட்பட்டவர்கள் எனக் கூறிய
அவர், அவர்கள் அனைவரும் முறையே ஒன்பது, இருபத்திரண்டு, மற்றும்
நான்கு முந்தையக் குற்றப்பதிவுகளைக் கொண்டுள்ளது தொடக்க க் கட்ட
சோதனையில் கண்டறியப்படுள்ளது என்றார்.

இக்கும்பலை கைது செய்ததன் வழி செபராங் பிறை உத்தாராவில் 10
கேபிள் திருட்டுச் சம்பவங்களுக்கும் செபராங் பிறை செலாத்தானில் 3
சம்பவங்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது எனத் தாங்கள் நம்புவதாக
அவர் குறிப்பிட்டார்.

கைதான அனைவரும் 1955ஆம் ஆண்டு சிறுகுற்றச் சட்டத்தின் 29(1)
பிரிவின் கீழ் விசாரணைக்காக எதிர்வரும் புதன் கிழமை வரை மூன்று
தினங்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.


Pengarang :