SELANGOR

கிள்ளான் ஆற்றில் நீரின் தரம் உயர்வு- புதிய மூல நீர் ஆதாரமாக மாற வாய்ப்பு

ஷா ஆலம், ஆக 6- கிள்ளான் ஆற்றில் நீரின் தரம் உயர்வு கண்டு வருகிறது. வரும் 2025 ஆம் ஆண்டுவாக்கில் மாநில மக்களுக்கான புதிய மூல நீர் ஆதாரமாக கிள்ளான் ஆற்றை மாற்றும் மாநில அரசின் இலக்கு இதன் மூலம் சாத்தியமாகும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

கிள்ளான் பள்ளத்தாக்கில் மக்கள் தொகை  90 லட்சமாக உயர்வு கண்டு வரும் நிலையில் மக்களின் நீர் தேவையை ஈடு செய்வதற்கு இந்த புதிய நீர் ஆதாரம் தேவைப்படுகிறது என்று லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியத்தின் இயக்குநர் ஹஸ்ரோல்நிசாம் ஷஹாரி கூறினார்.

கிள்ளான் பள்ளத்தாக்கின் முக்கிய நதியாக விளங்கி வரும் கிள்ளான் ஆற்றில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த ஆற்றிலிருந்து கிடைக்கும் நீர் வளத்தை நாம் முறையாகப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் உண்மையில் அது ஏமாற்றமளிக்கும் விஷயமாக இருக்கும் என அவர் சொன்னார்.

சுத்திகரிக்கப்பட்ட நீரை பயன்படுத்தும் நமது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 90 லட்சம் பேராகும். ஆகவே, நமக்கு இன்னும் கூடுதலான நீர் வளம் தேவைப்படுகிறது என அவர் தெரிவித்தார்.

கிள்ளான் ஆற்றிலிருந்து பெறப்படும் நீரை சுத்திகரிக்கும் பணி சுங்கை ராசாவ் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

பயனீட்டாளர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீரை ஆக்ககரமான முறையில் விநியோகிப்பதற்கு ஏதுவாக கிள்ளான் ஆற்றில் காணப்பட்ட அச்சுறுத்தலான அம்சங்கள் அனைத்தும் களையப்பட்டு விட்டன என்றார் அவர்.

கிள்ளான் ஆற்றில் சேகரிக்கப்படும் குப்பைகளின் அளவு 67 விழுக்காடு குறைந்து தற்போது 5,600 டன் மெட்ரிக் டன் குப்பைகள் மட்டுமே சேகரிக்கப்படுகின்றன என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த ஜூலை 24ஆம் தேதி கூறியிருந்தார்.

கெர்பாங் மெரிடைம் சிலாங்கூர் (எஸ்.எம்.ஜி.) திட்டத்தின் கீழ் இண்டர்செப்டர் இயந்திரம் மூலம் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் வரை 88,000 டன் குப்பை கிள்ளான் ஆற்றிலிருந்து சேகரிக்கப்பட்டன என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :