ANTARABANGSA

இங்கிலாந்தில் வன்செயல்- மலேசியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்து

கோலாலம்பூர், ஆக 6 – இங்கிலாந்தின் பல பகுதிகளில் கடந்த வாரம் தொடங்கி நிகழ்ந்து வரும் வன்செயல்களை குறிப்பாக முஸ்லிம் சமூகத்தை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் தாக்குதல்களை கருத்தில் கொண்டு மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும் படி அந்நாட்டிலுள்ள மலேசியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

லிவர்புல், மான்செஸ்டர், ஹல் மற்றும் சவுத் போர்ட் ஆகிய நகரங்களில் அமைதிப் பேரணியாக தொடங்கி போராட்டம் பின்னர் குறிப்பிட்ட தரப்பினரை இலக்காகக் கொண்ட வன்செயலாக மாறியுள்ளதாக லண்டனில் பயின்று வரும் மலேசியரான இஸ்மாயில் அம்ஷியார் முகமது சைட் (வயது 38) கூறினார்.

கடந்த ஜூலை 29 ஆம் தேதி சவுத் போர்ட்டில் உள்ள நடனப்பள்ளி ஒன்றில் 17 வயது இளைஞனால் மூன்று சிறார்கள் கடுமையான கத்திக் குத்துக் காயங்களுக்குள்ளானதைத் தொடர்ந்து அங்கு கலவரம் மூண்டது. அந்த சம்பவம் தொடர்பில் இணையம் மூலம பரப்பப்பட்ட தவறான தகவல்கள் நாடு முழுவதும் பதற்றம் ஏற்பட காரணமாக அமைந்தது.

வார இறுதியில் நடைபெற்ற மிக மோசமான வன்செயல்கள் இங்கிலாந்திலுள்ள மலேசியர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பலர் தங்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக வீட்டிலேயே முடங்கியுள்ளனர் என்று அவர் சொன்னார்.

அடுத்த வன்முறை நடைபெற இருக்கும் இடங்களின் பட்டியலை எனது குடியிருப்பு பகுதியில் வசிக்கும் நண்பர் எனக்கு அனுப்பினார். அது உண்மையான தகவலா என்று எனக்குத் தெரியாது. ஆயினும் நாங்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

அந்த போராட்டக்காரர்கள் இங்கிலாந்தின் பெரும்பான்மை மக்களை பிரதிநிதி க்கவில்லை. அந்நாட்டினரில் பலர் நட்புறவுடன் பழகக் கூடியவர்களாகவும் உதவக் கூடியவர்களாகவும் உள்ளனர் என்றார் அவர்.

போராட்டக்காரர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவதை தவிர்க்கும்படி இங்கிலாந்திலுள்ள மலேசிய பிரஜைகளைக் கேட்டுக் கொண்ட அவர், நிலையை கட்டுப்படுத்தும் பொறுப்பை அதிகாரிகளிடம் விட்டு விடுவோம் என்றார்.


Pengarang :