NATIONAL

சம்பள உயர்வுக்கேற்ப அரசு ஊழியர்களின் சேவை தரம் உயர வேண்டும்- பிரதமர் வலியுறுத்து

கோலாலம்பூர், ஆக 6- அரசாங்கம் விரைவில் அறிவிக்கவிருக்கும் சம்பள
உயர்வுக்கேற்ப அனைத்து அரசு ஊழியர்களும் மிகச் சிறப்பான சேவையை
மக்களுக்கு வழங்க வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மிக உயர்ந்த பட்ச சம்பள உயர்வை
உட்படுத்திய ஊதிய மறுசீரமைப்பை அரசாங்கம் அமல்படுத்தியதற்கு
இரண்டு காரணங்கள் உள்ளதாக அவர் சொன்னார்.

முதலாவது, நாடு தொடர்ந்து மேம்பாடு கண்டு வந்த போதிலும் கடந்த 12
ஆண்டுகளாக சம்பள உயர்வு தொடர்பான விரிவான மறுஆய்வு
மேற்கொள்ளப்படவில்லை. இரண்டாவது, அரசாங்க ஊழியர்களின்
பங்களிப்பை அங்கீகரிப்பதாகும் என அவர் குறிப்பிட்டார்.

நன்றியின் பொருளை என்றுமே உணராதவர்கள் மற்றும் உண்மையை
எப்போதும் ஏற்றுக் கொள்ளாதவர்கள் மத்தியில் எதிர்ப்புக் குரல்கள் வந்த
போதிலும் கடந்தாண்டு அக்டோபர் மாதம் வரவு செலவுத் திட்ட தாக்கலின்
போது நான் அறிவித்ததைப் போல் சம்பள உயர்வு தொடர்பான அறிவிப்பு
வரும் ஆகஸ்டு மாதத்தில் வெளியிடப்பட்டு எதிர்வரும் டிசம்பர் முதல் தேதி
முழுமையாக அமல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

இன்று இங்குள்ள பண்டார் ஸ்ரீ பெர்மைசூரியில் பொதுச் சேவை
ஊழியர்களுக்கான மலேசியா மடாணி வீடமைப்புத் திட்டத்தை தொடக்கி
வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரசு ஊழியர்களுக்கான புதிய சம்பள உயர்வு தொடர்பான
செயல்முறையை பிரதமர் எதிர்வரும் ஆகஸ்டு 16ஆம் தேதி புத்ராஜெயா,
அனைத்துலக மாநாட்டு மையத்தில் வெளியிடுவார்.

நாட்டின் மேம்பாட்டிற்கு பாடுபடுவதில் அரசு ஊழியர்கள் எப்போதும்
அரசாங்கத்துடன் இணைந்திருக்க வேண்டும் என்றும் அன்வார்
தமதுரையில் வலியுறுத்தினார்.

மடாணி தேசத்தில் நாம் எப்போதும் நீடித்த பொருளாதாரத்தை உறுதி
செய்ய வேண்டும். ரிங்கிட்டின் மதிப்பு நமக்கு எப்போதும் சிக்கலாக
இருந்து வந்தது. இப்போது ரிங்கிட்டின் மதிப்பு நம்பிக்கையூட்டும்
வகையில் உள்ளதோடு கடந்த 14 ஆண்டுகளில் இன்று சிறப்பான அடைவு
நிலையைப் பதிவு செய்துள்ளது என்றார் அவர்.


Pengarang :