NATIONAL

ஹனியே பற்றிய அன்வாரின் பதிவுகள் சமூக ஊடகத்திலிருந்து நீக்கம்- மன்னிப்பு கோரியது மேட்டா

கோலாலம்பூர், ஆக 6 – ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியே கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளில் பதிவேற்றம் செய்யப்பட்ட உள்ளடக்கங்களை நீக்கியதற்காக மேட்டா இன்று மன்னிப்பு கோரியுள்ளது.

இஸ்மாயில் ஹனியே மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் பதிவுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து மலேசியா மேட்டாவிடம் விளக்கம் கேட்டிருந்தது.

பிரதமரின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களிலிருந்து உள்ளடக்கம் அகற்றப்பட்டது தொடர்பான செயல்பாட்டு பிழைக்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். சரியான செய்தித் தகுதியான லேபிளுடன் மறுபடியும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று மேட்டா பேச்சாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் கேள்விகளுக்கு மின்னஞ்சல் மூலம் அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விகாரம் தொடர்பில் விளக்கம் கோருவதற்காக தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி பாட்சில் மற்றும் பிரதமர் அலுவலக உறுப்பினர்கள் மேட்டா பிரதிநிதிகளை நேற்றுச் சந்தித்தனர்.

மேட்டாவின் செயல்களை பாரபட்சமானதாகவும் அநீதியானதாகவும், கருத்துச் சுதந்திரத்தை அப்பட்டமாக மீறக்கூடியதாகவும் பிரதமர் அலுவலகம் கருதுகிறது என்று அந்த அலுவலகம் நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது.


Pengarang :