NATIONAL

இஸ்ரேலின் குற்றங்களை விவாதிக்க ஒ.ஐ.சி. அவசரக் கூட்டம்- மலேசியா சார்பில் முகமது ஹசான் பங்கேற்பு

புத்ராஜெயா, ஆக 7- நாளை சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெறும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (ஒ.ஐ.சி.) வெளியுறவு அமைச்சர்கள் நிலையிலான உயர்மட்ட நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டத்தில் பங்கேற்கும் மலேசிய பேராளர் குழுவுக்கு வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான் தலைமையேற்கிறார்.

பாலஸ்தீனம் மற்றும் ஈரான் முன்வைத்த தீர்மானத்தின் பேரில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ச்சியாக புரிந்து வரும் அட்டூழியங்கள் மற்றும் ஈரானின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலான ஊடுருவல்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.

பதினைந்தாவது ஒ.ஐ.சி. உச்சநிலை மாநாட்டின் தலைவராக இருக்கும் காம்பியாவின் வெளியுறவு அமைச்சர் இந்த கூட்டத்திற்கு தலைமையேற்பார்.

 காஸா தீபகற்பத்தில் நிகழ்ந்து வரும் இனப்படுகொலை மற்றும் அழிப்பு நடவடிக்கைகளையும் தெஹ்ரானில் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதையும் மிக வன்மையாக கண்டிப்பதற்குரிய வாய்ப்பினை இந்த மாநாடு மலேசியாவுக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாலஸ்தீனர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் மலேசியாவின் கடப்பாட்டையும் 1967ஆம் ஆண்டிற்கு முந்தைய எல்லையின் அடிப்படையில் இறையாண்மை கொண்ட பாலஸ்தீன தேசத்தின் உருவாக்கத்திற்கு நாடு வழங்கி வரும் ஆதரவையும் புலப்படுத்தும் விதமாகவும் இந்த மாநாட்டில் மலேசியாவின் பங்கேற்பு அமையும்.


Pengarang :