NATIONAL

மோட்டார் சைக்கிளோட்டிகள் சம்பந்தப்பட்ட விபத்துகள் அதிகரிப்பு- பிரதமர் கவலை

கோலாலம்பூர், ஆக 7- நாட்டில் மோட்டார் சைக்கிளோட்டிகள் சம்பந்தப்பட்ட சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கவலை தெரிவித்துள்ளார்.

சட்ட அமலாக்கத்தில் காணப்படும் பலவீனம் மற்றும் சாலை பராமரிப்பு பிரச்சினை ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தப்படும் இந்த விவகாரம் குறித்து பாதுகாப்பான சமூக கூட்டமைப்பின் தலைவர் டான்ஸ்ரீ லீ லாம் தையும் கவலையை வெளிப்படுத்தியதாக அவர் தனது  பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று தம்முடன் மரியாதை நிமித்தச் சந்திப்பை நடத்திய லீ லாம் தையுடன் விவாதிக்கப்பட்ட விஷயங்களில் சாலை பாதுகாப்பு மற்றும் வேலையிட பாதுகாப்பு தொடர்பான விஷயங்களும் அடங்கும் என அவர் சொன்னார்.

இத்தகைய அமைப்புகளும் இதர அரசு சாரா இயக்கங்களும் நிலையான பாதுகாப்பை உறுதி செய்வதில் சமூகத்திற்கு தொடர்ச்சியாக சேவைகளை வழங்கி வர வேண்டும் என்பதோடு மலேசியா மடாணி கோட்பாட்டு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் உரிய பங்கினை ஆற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

செல்வாக்குமிக்க சமூக இயக்கவாதியான லீ தலைமையேற்றுள்ள அந்த அரசு சாரா அமைப்பு சமூகத்தில் பாதுகாப்பு கலாசாரத்தை உருவாக்குவதிலும் உகந்த வேலையிட சூழலை உருவாக்குவதில் அளப்பரிய சேவையை ஆற்றி வருகிறது என பிரதமர் குறிப்பிட்டார்.


Pengarang :