SELANGOR

அம்னோவின் கோத்தா ராஜா தொகுதி கோரிக்கையை சிலாங்கூர் பக்கத்தான் விவாதிக்கும்- மந்திரி புசார்

கோல சிலாங்கூர், ஆக 7 – அடுத்த பொதுத் தேர்தலில் கோத்தா ராஜா தொகுதியில் குறைந்தபட்சம் ஒரு இடத்தையாவது  ஒதுக்க வேண்டும் என்ற அம்னோவின் கோரிக்கையை விவாதிக்கவும் பரிசீலிக்கவும் சிலாங்கூர் பக்காத்தான் ஹராப்பான் தயாராக உள்ளது.

ஒற்றுமை அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகள் என்ற முறையில்  கூட்டம் ஒன்றில் இந்த விஷயத்தை இறுதி செய்து பின்னர் தலைவர் மன்றத்தின் கவனத்திற்கு  கொண்டு வரலாம் என்று சிலாங்கூர் பக்காத்தான் தலைவர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

வரும் 2027 அல்லது 2028 ஆம் ஆண்டுவாக்கில் நாங்கள் தேர்தலை எதிர் கொள்வதால் இந்த விஷயத்தை விவாதிக்க வேண்டும் என்பதோடு  இது நமது ஒற்றுமை அரசாங்கத்தின் ஒரு பகுதியாகவும் கருதப்பட வேண்டும் என்று  மாநில மந்திரி புசாருமான அவர் சொன்னார்.

நேற்று இங்குள்ள  மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில்  புஞ்சாக் ஆலம் வளாகத்தில் நடைபெற்ற  சிலாங்கூர் மந்திரி புசார் கிண்ண  2024 சீருடை அணிகளின் அணி வகுப்புப் போட்டியின் நிறைவு விழாவிற்கு தலைமையேற்றப் பிறகு  செய்தியாளர்களிடம் அமிருடின் பேசினார்.

அம்னோ பிரிவு கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரை தொடர்பில் அதிகப்படியாக எதிர்வினையாற்ற வேண்டாம்  என்று ஒற்றுமை  அரசாங்கத்தில் உள்ள மற்ற பங்காளிக் கட்சிகளை அவர் வலியுறுத்தினார்.

உடனடியாக எந்த முடிவுக்கும் வராமல்  முறைப்படி நடக்க விடுவோம். அதன் மேம்பாடு மற்றும் அமலாக்கம் குறித்து பிறகு கவனிப்போம்  என்றார் அவர்.

வரவிருக்கும் தேர்தலில் கோத்தா ராஜாவில்  உள்ள 4 தொகுதிகளில்  குறைந்தபட்சம் ஒன்றையாவது கட்சிக்கு வழங்க வேண்டும் என்ற பரிந்துரையை தாம் ஆதரிப்பதாக  அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி இம்மாதம் 4ஆம் தேதி கூறியிருந்தார்.

கோத்தா ராஜா  தொகுதி அம்னோ ஆண்டுக் கூட்டத்தின் போது அத்தொகுதி  தலைவர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜிஸ்  இந்த பரிந்துரை முன்வைத்திருந்தார்.

கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினராக விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அமைச்சரும் அமானா கட்சியின் தலைவருமான டத்தோஸ்ரீ முகமது சாபு கடந்த இரு தவணைகளாக இருந்து வருகிறார்.

அத்தொகுதியில் உள்ள மூன்று சட்டமன்றங்களில் ஒன்றான செந்தோசாவில் பி.கே.ஆர். சார்பில்  டாக்டர் ஜி. குணராஜ்  வெற்றி பெற்ற வேளையில் ஜசெக வசமிருக்கும்  கோத்தா கெமுனிங் தொகுதியில் எஸ்.பிரகாஷ் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். மற்றொரு தொகுதியான  சுங்கை காண்டீஸ் கடந்த தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வசம் வீழ்ந்தது.


Pengarang :