NATIONAL

தனியார், தொடக்க நிறுவனங்களை உட்படுத்திய தாய். சிறப்பு பொருளாதார மண்டலம்- மலேசியா பரிந்துரை

கோலாலம்பூர், ஆக 7- மேலும் அதிகமான முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஏதுவாக சிறப்பு பொருளாதார மண்டலத் திட்டத்தில் (எஸ்.இ.இஸட்.) தனியார் துறையினர் மற்றும் தொடக்க நிறுவனங்களை தாய்லாந்து ஈடுபடுத்த வேண்டும் என்ற மலேசியா பரிந்துரைத்துள்ளது.

நேற்று மரியாதை நிமித்த வருகை  மேற்கொண்ட தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் மாரிஸ் சங்கியாபொங்சாவுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போது இந்த பரிந்துரை முன்வைக்கப் பட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

அவர்களின் (தனியார் மற்றும்  தொடக்க நிறுவனங்கள்) ஈடுபாடு சிறப்பு பொருளாதார மண்டலத்தில் மேலும் அதிகமான முதலீடுகளை ஈர்க்க உதவும். இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி கோலோக் ஆற்றின் நெடுகிலும் வர்த்தக வளாகங்களை அமைப்பதற்கான இடத்தை ஒதுக்கும்படி கிளந்தான் அரசாங்கத்தை கேட்டுக் கொள்ள விரும்புகிறேன் என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறினார்.

இதனிடையே, ஒவ்வோராண்டும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் இரு  நாடுகளின் எல்லையில் உள்ள மக்களுக்கு உதவும் நோக்கில் கோலோக் ஆற்று முகத்துவாரத்தை ஆழப்படுத்துவது குறித்தும் தாம் தாய்லாந்து வெளியுறவு அமைச்சருடன் விவாதித்ததாக அன்வார் சொன்னார்.

மேலும், தென் தாய்லாந்து அமைதிப் பேச்சுகளில் தனக்குள்ள கடப்பாட்டையும் மலேசியா இச்சந்திப்பில் வெளிப்படுத்தியது என்றார் அவர்.

வரும் செப்டம்பர் 19ஆம் தேதி ஏழாவது வருடாந்திர ஆலோசனைக் கூட்டத்தை மலேசியா ஏற்று நடத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமைதிப் பேச்சுகளை விரைவுபடுத்துவதற்கான மலேசியாவின் கடப்பாட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் முன்னதாக வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :