SELANGOR

உற்பத்தியை அதிகரித்து தரத்தை நிலை நிறுத்துவீர்- சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்து

ஷா ஆலம், ஆக 7- அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பணியில் முழுமையான ஈடுபாட்டை வெளிப்படுத்தும் அதேவேளையில் உற்பத்தி திறனையும் அதிகரிக்கும்படி சிலாங்கூர் மாநிலத்திலுள்ள அரசு ஊழியர்கள் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர்.

மத்திய அரசு நிர்ணயித்துள்ள சம்பள உயர்வை அமல்படுத்த தயாராக இருக்கும் சிலாங்கூர் அரசுக்கு நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்வதாக அரசு ஊழியர்கள் தொழிற்சங்கமான கியூபெக்ஸ் தலைவர் டத்தோ அட்னான் மாட் கூறினார்.

முன்னேற்றம் கண்ட மாநிலமாக விளங்கும் சிலாங்கூரில் பல்வேறு நிலைகளைக் சேர்ந்த பங்களிப்பாளர்களும் வாடிக்கையாளர்களும் வருவர் என்பதால் மாநிலத்திலுள்ள அரசு ஊழியர்கள் சிறப்பான சேவையை வழங்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

பொதுச் சேவை ஊழியர்கள் என்ற முறையில் நாம் மக்கள் முன் பல விஷயங்களில் விவரமறிந்த வர்களாக இருக்க வேண்டும். எளிதில் திருப்தியடைந்து விடாமல்  சிலாங்கூர் மந்திரி புசாரின் சிலாங்கூருடன் முன்னேறுவோம் என்ற சுலோகத்துக்கு ஏற்ப மக்களின் முன்னால் இருக்கக் கூடியவர்களாக விளங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மத்திய அரசின் சம்பள உயர்வைப் பிரதிபலிக்கும் வகையில் மாநில அரசும் தனது ஊழியர்களின் ஊதியத்தை அதிகரிக்கும் என மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியிருந்தது தொடர்பில் அட்னான் இவ்வாறு கருத்துரைத்தார்.

வரும் 16 ஆம் தேதி புத்ரா ஜெயாவில் நடைபெறவிருக்கும் மாப்பா எனப்படும் 19 வது பொதுச் சேவை பிரிமியர் பேரணியில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியிடவுள்ள சம்பள உயர்வு விகிதாசாரத்துக்கு ஏற்ப மாநில அரசின் சம்பள உயர்வு அமையும் என்று அமிருடின் கூறியிருந்தார்.


Pengarang :