NATIONAL

பாலஸ்தீன பிரச்சனைக்குத் தீர்வு காண நான்கு பரிந்துரைகள்- ஒ.ஐ.சி. மாநாட்டில் மலேசியா முன்வைத்தது

கோலாலம்பூர், ஆக 8 – அனைத்துலக நீதிமன்றத்தின் (ஐ.சி.ஜே.) ஆலோசனைக் கருத்தைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மதிப்பிடுவதற்கும் அவற்றை அடையாளம் காண்பதற்கும்  ஏதுவாக செல்வாக்கு பெற்ற நபர்கள் அடங்கிய குழுவை நிறுவுவது உட்பட பாலஸ்தீன  போராட்டத்தை ஆதரிக்கும் நான்கு முக்கிய நடவடிக்கைகளை மலேசியா முன்மொழிந்துள்ளது.

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஒ.ஐ.சி.) கூட்டிய அவசரக் கூட்டத்தில் தேசிய அறிக்கையை வழங்கிய போது மலேசியாவின் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான் முன்மொழியப்பட்ட அந்த நான்கு நடவடிக்கைகளை முன்வைத்தார்.

அனைத்துலக நீதிமன்றத்தின்  தீர்ப்புகள் மற்றும் பெய்ஜிங் பிரகடனத்தின் வாயிலாகப் பாலஸ்தீன பிரிவுகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட ஒற்றுமை ஆகியவற்றின் மூலம் பாலஸ்தீனத்திற்கான உலகளாவிய ஆதரவை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த நடவடிக்கைகள் வலியுறுத்துவதாக அவர் கூறினார்.

அத்தகைய நடவடிக்கைகள் உலகளாவிய அதிகார வரம்பில் கவனம் செலுத்தும் அதேவேளையில் சட்டத்தின் நிலையான பயன்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் நேற்று  ஜெட்டாவில் நடைபெற்ற அம்மாநாட்டின்  போது வலியுறுத்தினார்.

நிறவெறிக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின்  சிறப்புக் குழுவை மீண்டும் அமைக்க வேண்டும் என்பது மலேசியாவின் இரண்டாவது பரிந்துரையாகும் என அவர் சொன்னார்.

இந்தக் குழுவின் முதன்மைப் பணியானது  பாலஸ்தீனப் பிரதேசங்களை  இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பதைத் தடுப்பது மற்றும் பாலஸ்தீனர்களுக்கு எதிரான நிறவெறிக் கொள்கைகளைத் கையாள்வதும் ஆகும்.

மூன்றாவதாக, பாலஸ்தீன விவகாரம் மீது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுப் பேரவையின்  (உங்கா) 10வது அவசரகால சிறப்பு அமர்வை ஒருமித்த கருத்து கொண்ட நாடுகளுடன் இணைந்து மீண்டும் தொடங்குமாறு  மலேசியா ஒ.ஐ.சி.யைப் பரிந்துரைத்தது.

இறுதியாகப் போருக்குப் பிந்தைய பாலஸ்தீனப் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை மீண்டும் உருவாக்குவதில் நாம் நமது பிளவுபடாத ஆதரவை வழங்கும் அதே வேளையில் முழுமையாகவும் உதவ வேண்டும். இது அந்நாட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதை எளிதாக்கும் ஒரு முக்கிய படியாகும்  என்று முகமது கூறினார்.


Pengarang :