NATIONAL

சமூக ஊடகங்களுக்கான லைசென்ஸ் திட்டம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது-ஃபாஹ்மி ஃபாட்சில் கூறுகிறார்

கூச்சிங், ஆக. 8 – சமூக ஊடகத் தளங்களுக்கு லைசென்ஸ் வழங்கும்
மலேசியாவின் திட்டம் பல நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளதோடு இந்த
திட்டத்தை பின்பற்ற அவை ஆர்வம் காட்டியுள்ளன என்று தகவல்
தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.

இந்த உத்தேசத் திட்ட அமலாக்கம் தொடர்பில் மேலும் அறிந்து
கொள்வதற்காக மலேசிய தகவல் மற்றும் பல்லுடக ஆணையத்தை
தொடர்பு கொண்ட தரப்புகளில் இங்கிலாந்தின் தொடர்பு ஒழுங்குமுறை
அமைப்பும் (ஆஃப்கோம்) ஒன்றாகும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த லைசென்ஸ் நடைமுறை குறித்து சிங்கப்பூர் அரசும் விபரங்களைக்
கேட்டுள்ளது. எனினும், தங்களின் சட்டத்திட்டங்களுக்கு ஏற்ப அந்நாடுகள்
அமலாக்க வழிமுறைகளைக் கொண்டிருப்பதை நாம் நினைவில் கொள்ள
வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் நாம் ஆசியான் அமைப்பின் தலைவர்
பொறுப்பை ஏற்கும் போது மேலும் அதிகமான நாடுகள் நமது அடைவு
நிலையையும் அடுத்தாண்டு ஜனவரி 2025இல் அமலுக்கு வரவிருக்கும்
இந்த லைசென்ஸ் நடைமுறையின் அடிப்படையில் நாம்
செய்வதவற்றையும் அறிந்து கொள்ள ஆர்வம் காட்டும் எனக் கருதுகிறேன்
என்று அவர் சொன்னார்.

இன்று சரவா மண்டலத்திற்கான 2023 சிறந்த சேவைக்கான விருதளிப்பு நிகழ்வைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னதாக தமது உரையில், மலேசிய அரசின் சமூக ஊடகங்களுக்கான
லைசென்ஸ் முறை மற்ற நாடுகளின் கண்களைத் திறந்துள்ளதோடு சமூக
ஊடகத் தளங்கள் தொடர்ந்து லாபம் ஈட்டிக் கொண்டு நாட்டின் சட்டதிட்டங்களை மீறிக் கொண்டிருப்பதையும் உணர்த்தியுள்ளது என்றார் அவர்.

சமூக ஊடகத் தளங்கள் விஷயத்தில் நீண்ட காலமாகப் போராடி வரும்
மேற்கத்திய ஒழுங்கு முறை அமைப்பான ஆஃப்கோம் முதன் முறையாக
நம்மைத் தொடர்பு கொண்டு லைசென்ஸ் நடைமுறை குறித்து
வினவியுள்ளது என்று அவர் கூறினார்.


Pengarang :