NATIONAL

பெரனாங்கில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க அதிக தங்குமிட வசதிகள்- மாநில அரசு ஆலோசனை

உலு லங்காட், ஆக. 9 – பெரனாங்கில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க
அதிகமான ஹோட்டல்கள் மற்றும் ஹோம் ஸ்தேய் எனப்படும்
சுற்றுப்பயணிகள் தங்குவதற்கான குடியிருப்புகள் உருவாக்கப்படுவதை
மாநில அரசு வரவேற்கிறது.

பெரனாங்கில் ஹோரைசன் மோட்டார் சைக்கிள் பந்தயத் தடம்
அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளின் தேவையை
இத்தகைய தங்குமிட வசதிகள் ஈடு செய்யும் என்று மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இத்தகைய தங்குமிட வசதிகளை ஏற்படுத்துவதற்கான உகந்த இடம்
மற்றும் அத்திட்டத்தை மேற்கொள்ளக்கூடிய விவேக முதலீட்டு
பங்காளிகளை அடையாளம் காணும் நடவடிக்கையில் காஜாங்
நகராண்மைக் கழகம் ஈடுபட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த ஹோரைசன் தடம் அமைக்கப்படுவதன் மூலம் அனைத்துலக
நிலையிலான போட்டிகள் இங்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்படும்
நிலையில் வெளிநாட்டினர் உள்பட இங்கு வரும் சுற்றுப்பயணிகள்
தங்குவதற்கு போதுமான ஹோட்டல்கள் இல்லாதிருப்பதை காண
முடிகிறது.

புக்கிட் புரோகாவுக்கு அருகில் அமைந்துள்ள இந்த பெரனாங் நகர்
எப்போதும் சுற்றுலா ஈர்ப்பு மையமாக விளங்கி வருகிறது. இங்கு அதிக
ஹோட்டல்களை நிறுவுவதன் மூலம் சுங்கை செங்காக் மற்றும் சுங்கை
லுய் உள்ளிட்ட சுற்றுலா மையங்களுக்கு சுற்றுப்பயணிகள் வருவதற்குரிய
வாய்ப்பு ஏற்படும் என்றார் அவர்.

நேற்று இங்கு ஹோரைசன் பெரனாங் தடத்தை திறந்து வைத்து உரையாற்றுகையில் மந்திரி புசார் இதனைக் குறிப்பிட்டார். இந்த தடத்தை மோட்டார் சைக்கிள் கிளப்பான ஹோரைசன் மோட்டோர்ஸ்போர்ட் காஜாங் நகராண்மைக் கழகத்தின் வாயிலாக சிலாங்கூர் மாநில அரசுடன் இணைந்து உருவாக்கியுள்ளதாக அவர்
சொன்னார்.

சுமார் 5.7 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த மையம் 1.5 கிலோ
மீட்டர் பந்தயத் தடத்தையும் 13 வளைவுகளையும் கொண்டுள்ளது. இது
தவிர இங்கு பொது மக்களின் வசதிக்காகப் பல்வேறு வசதிகளும்
ஏற்படுத்தப்பட்டுள்ளன.


Pengarang :