NATIONAL

மாநில அரசின் மூன்று வேலை வாய்ப்பு சந்தைகளில் 276 பேருக்கு உடனடி வேலைவாய்ப்பு

ஷா ஆலம், ஆக. 12 – இவ்வாண்டு ஜூன் மாதம் தொடங்கி மேற்கொள்ளப்பட்ட மூன்று ஜோப்கேர் சிலாங்கூர் வேலைவாய்ப்பு சந்தைகளில் 276 பேருக்கு உடனடியாக வேலை  வாய்ப்பு கிடைத்தது.

பெட்டாலிங் மாவட்டத்தில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்புச் சந்தையில் மிக அதிகமாக அதாவது 153 நேர் உடனடியாக வேலை வாய்ப்பைப் பெற்றதாக சிலாங்கூர் தொழிலாளர் திறன் மேம்பாட்டுப் பிரிவின் நடவடிக்கை அதிகாரி பி. அன்பரசு கூறினார்.

உலு சிலாங்கூரில் நடத்தப்பட்ட வேலை வாய்ப்புச் சந்தையில் 91 பேருக்கும் கோல லங்காட்டில் நடைபெற்ற சந்தையில் 32 பேருக்கும் உடனடி வேலை வாய்ப்பு வழங்கப் பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த மூன்று வேலை வாய்ப்புச் சந்தைகளின் வாயிலாக இரண்டாம் கட்ட நேர்முகத் தேர்வில் பங்கேற்கும் வாய்ப்பினை சுமார் 800 பேர் பெற்றுள்ளனர். இந்த வேலை வாய்ப்புச் சந்தைக்கு கிடைத்து வரும் ஆதரவு மிகவும் ஊக்கமூட்டும் வகையில் உள்ளது என அவர் சிலாங்கூர் கினிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி உலு லங்காட் மாவட்டத்தின் டேவான் பெர்பண்டாரான் எம்.பி.ஏ.ஜே.வில் நடைபெற இருக்கும்  வேலை வாய்ப்புச் சந்தையில் பங்கேற்று பயனடையும்படி வேலை தேடுவோரை அவர் கேட்டுக் கொண்டார்.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும் இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் தங்களின் சுய விபரக் குறிப்புடன் கலந்து கொள்ளலாம் என்றார் அவர்.

மாநிலத்திலுள்ள ஒன்பது மாவட்டங்களில் நடத்தப்படும் ஜெலாஜா ஜோப்கேர் சிலாங்கூர் வேலை வாய்ப்புச் சந்தையில் 35,000 வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதாக மனித வளத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு முன்னதாக கூறியிருந்தார்.

இந்த வேலை வாய்ப்புச் சந்தை கடந்த ஜூன் 29ஆம் தேதி உலு சிலாங்கூரிலும் ஜூலை 17ஆம் தேதி பெட்டாலிங் ஜெயாவிலும் ஆகஸ்டு 10ஆம் தேதி கோல லங்காட்டிலும் நடைபெற்றது.

இந்த நிகழ்வு வரும் ஆகஸ்டு 17ஆம் தேதி உலு லங்காட் எம்.பி.ஏ.ஜே. மண்டபத்திலும் செப்டம்பர் 21ஆம் தேதி தாமான் ஸ்ரீ கோம்பாக், தாமான் பெரிங்கினிலும், அக்டோபர் 5ஆம் தேதி கிள்ளான் டேவான் ஹம்சாவிலும் அக்டோபர் 19ஆம் தேதி கோல சிலாங்கூர், டேவான் பெங்காவா பெர்மாத்தாங்கிலும் நவம்பர் 16ஆம் தேதி சிப்பாங், பண்டார் பாரு சாலாக் திங்கி சமூக மண்டபத்திலும் டிசம்பர் 14ஆம் தேதி சபாக் பெர்ணம், டேவான் துன் ரசாக்கிலும் நடைபெறும்.


Pengarang :