NATIONAL

காஜாங் தொகுதியில் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு- சட்டமன்ற உறுப்பினர் டேவிட் சோங் தகவல்

உலு லங்காட், ஆக. 13 – காஜாங் வட்டார மக்கள் எதிர்நோக்கி வந்த
பல்வேறு பிரச்சினைகளுக்கு மாநில அரசின் இந்த ஓராண்டு கால
நிர்வாகத்தில் தீர்வு காணப்பட்டுள்ளதாக காஜாங் தொகுதி சட்டமன்ற
உறுப்பினர் டேவிட் சோங் கூறினார்.

தீர்வு காணப்பட்ட பிரச்சினைகளில் சமூக நலன், சுற்றுச்சூழல், காஜாங்
சுகாதார கிளினிக்கில் காணப்பட்ட கார் நிறுத்துமிட பற்றாக்குறை, புக்கிட்
டுக்கோங்கில் ஏற்படும் திடீர் வெள்ளம் மற்றும் ட்வின் பால்ம்ஸ் சுங்கை
லோங்கில் சட்டவிரோத குப்பை எரிப்பு ஆகியவையும் அடங்கும் என
அவர் சொன்னார்.

காஜாங் சுகாதார கிளினிக்கில் கூடுதலாக 154 கார் நிறுத்துமிடங்கள்
நிறுவன சமூக பொறுப்புணர்வின் அடிப்படையில் பல்வேறு தரப்பினரின்
ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.

நீண்ட காலமாக நிலவி வந்த ட்வின் பால்ம்ஸ் சட்டவிரோத குப்பை
எரிப்பு மையப் பிரச்சினை மேல் மட்டத்தின் கவனத்திற்கு கொண்டுச்
செல்லப்பட்டதோடு அப்பகுதியில் அடிக்கடி கண்காணிப்பும்
மேற்கொள்ளப்பட்டது. அதோடு மட்டுமின்றி இவ்விவகாரத்தை நான்
சட்டமன்றத்திலும் எழுப்பினேன். இதன் பயனாக பொருளாதார அமைச்சின்
ஒத்துழைப்புடன் அப்பகுதியை புனரமைக்கும் பணி தற்போது
தொடங்கப்பட்டு விட்டது என்றார் அவர்.

அருகிலுள்ள தொழிற்சாலை பகுதியில் காணப்பட்ட சீரற்ற வடிகால்
முறையின் காரணமாக புக்கிட் டுக்கோங் பகுதியில் ஏற்பட்ட திடீர்
வெள்ளப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக சொன்னார்.
நேற்று இங்கு ‘தூய்மையான காஜாங், எனது இதயத்தில் காஜாங்‘ எனும்
இயக்கத்தின் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

காஜாங் சவுஜானா இம்பியான தேசிய இடைநிலைப் பள்ளியில்
நடைபெற்ற இந்த நிகழ்வுக்குப் பிரதமரின் அரசியல் செயலாளர் அஸ்மான்
அபிடின் தலைமை தாங்கினார்.

வெள்ளப் பிரச்சனைக்கு கட்டங் கட்டமாகத் தீர்வு காணப்பட்டு வரும்
வேளையில் பண்டார் மக்கோத்தா செராஸ் பகுதியில் உள்ள சட்டவிரோதக்
குப்பை கொட்டும் மையப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் தற்போது
கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என டேவிட் சோங் கூறினார்.


Pengarang :