NATIONAL

சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் மாற்றம் இல்லை-மந்திரி  புசார் அறிவிப்பு

ஷா ஆலம், ஆக.13 – சிலாங்கூர் மாநில அரசு  சிறப்பான அணியைக் கொண்டிருப்பதால்  ஆட்சிக்குழு உறுப்பினர்  வரிசையில் இதுவரை  எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று  மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தங்கள்  பொறுப்புகளை சிறப்பாக செய்யும் அதேவேளையில்  ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு நல்கி வருவதாகக் கூறிய அவர், எனினும் அவர்கள் தங்கள் செயல்திறனை மேம்படுத்த வேண்டும் என்று சொன்னார்.

அனைவருக்கும் சிறப்பாக செயல்படுவதற்கும்   நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை  அடைவதற்கு ஏதுவாக வாக்குறுதிகள்  நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்தற்குமான  ஒரு நினைவூட்டலாக இது விளங்குகிறது என்று அவர் தெரிவித்தார்.

சாத்தியம் (ஆட்சிக்குழு  மறுசீரமைப்பு) பற்றி நீங்கள் கேட்டால், நோய், இறப்பு மற்றும் பிற காரணங்களால் நடப்புச் சூழலுக்கேற்ப  அது எந்த நேரத்திலும் நடக்கும். நாங்கள் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஒரு வருட நிர்வாகத்திற்கு  பிறகு  சேவையை வலுப்படுத்த எங்கள் செயல்திறனில் முன்னேற்றம் தேவை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். கடந்த வாரம்  சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் செயல்திறனை அதிகரிப்பது,   சாதனைகள் மற்றும்  அடைய வேண்டிய அடைவு நிலை குறித்து  அவர்களுக்கு  நான் நினைவூட்டினேன் என்று அவர் இன்று இங்கு ஒரு நிகழ்ச்சியில் சந்தித்த போது அவர் கூறினார்.

மாநிலத்தின் செயல்திறன் அளவை மேலும் மேம்படுத்துவதற்கு ஏதுவாக  ஆட்சிக்குழுவை   மாற்றியமைப்பது குறித்து கெஅடிலான் மற்றும் ஜசெக தலைவர்கள் பரிசீலித்து வருவதாக மலேசிய கெஸட் இணைய ஊடகம் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.

தற்போதுள்ள ஆட்சிக்குழுவில்  பணியை சிறப்பாக  பணியாற்றத் தவறிய காரணத்திற்காக அல்லாமல்  அனுபவம் வாய்ந்த நபர்களுக்கு வாய்ப்புகளை வழங்கும் நோக்கிலான இந்த மறுசீரமைப்பு  இம்மாத இறுதியில் அல்லது செப்டம்பரில் அமல் செய்யப் படலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :