NATIONAL

லோட் நிலக் குடியிருப்புகளில் வீடு வீடாகக் குப்பை அகற்றும் திட்டம் – கவுன்சிலர் யோகேஸ்வரி தகவல்

ஷா ஆலம், ஆக. 15 – இங்குள்ள புக்கிட் கெமுனிங் லோட் நிலக் குடியிருப்புகள் மற்றும் வர்த்தக வளாகங்களில் குப்பைகளை அகற்றும் திட்டம் அமல்படுத்தப்படுள்ளதாக ஷா ஆலம் மாநகர்  மன்ற உறுப்பினர் யோகேஸ்வரி சாமிநாதன்  கூறினார்.

சாலையோரங்களில் குப்பைகளைக் கொட்டப்படுவதை தவிர்ப்பதற்கும் புக்கிட் கெமுனிங் சாலை நெடுகிலும் நிலவி வரும்  தூய்மைக்கேட்டுப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கும் ஏதுவாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவன ஊழியர்கள் குப்பைகளை அகற்றும் பணியை எளிதாக மேற்கொள்வதற்கு ஏதுவாக குப்பைத் தொட்டிகளை  ஏற்பாடு செய்யும்படி வட்டார மக்கள் அறிவுறுத்தப்படுதாகத் தெரிவித்தார்.

இவ்வட்டாரத்திலுள்ள கடைகள் மற்றும் வீடுகளில் சேரும் குப்பைகள் புக்கிட் கெமுனிங் சாலையோரம் கொட்டப்படும் காரணத்தால் அப்பகுதியில் துர்நாற்றம் உள்ளிட்ட  தூய்மைக்கேட்டுப் பிரச்சனைகள் எழுந்து வருவதோடு குப்பைகள் கால்வாயில் விழுந்து நீரோட்டமும் தடைபடுகிறது.

இப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் இங்குள்ள கடைகள் மற்றும் வீடுகளுக்கு பணியாளர்கள் நேரில் சென்று குப்பைகளை அகற்றும் திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் அமல் படுத்தினோம். அது தொடர்பான அறிவிப்பு பாதகைகள் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.

கே.டி.இ.பி. வேஸ்ட் மேனேஜ்மென்ட் பணியாளர்கள் லோட் நிலக் குடியிருப்பு பகுதிகளுக்கு தினமும் மோட்டார் சைக்கிளில் சென்று குப்பைகளை சேகரிப்பார்கள். அதே சமயம் கடைகளில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை குப்பை சேகரிக்கப்படும்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டத்திற்கு பெரும்பாலான குடியிருப்பாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தாலும் சிலர் இன்னும் குப்பைத் தொட்டிகளை தயார் செய்யாமல் இருக்கின்றனர். மாநகர் மன்றத்தினால் அபராதம் விதிக்கப்படாமலிருப்பதை தவிர்க்க விரைந்து குப்பைத் தொட்டிகளை தயார் செய்யும்படி சம்பந்தப்பட்ட குடியிருப்பாளர்களை கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.

குப்பைகள் முறையாக அகற்றப்படாத பட்சத்தில் பொது மக்கள் லோட் நிலக் குடியிருப்பாளர்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள வாட்ஸ்ஆப் மூலம் தமக்கு தகவல் தெரிவிக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :