ANTARABANGSA

மருத்துவர் கற்பழிக்கப்பட்டு கொலை – இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

மும்பை, ஆக 15 – பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவின் பல நகரங்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் இரவு முழுவதும் பேரணியாகச் சென்று பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்தனர்.

“இரவை மீட்டெடுக்கவும்” என்று எழுதப்பட்ட சுவரொட்டிகள் மற்றும் மெழுகுவர்த்திகள் ஏந்தியபடி கிழக்கிந்திய நகரமான கொல்கத்தா உட்பட நகரங்கள் முழுவதும் பெண்கள் அணிவகுப்பு நடத்தினர்.

அங்கு கடந்த வாரம் பயிற்சி மருத்துவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், சிறந்த மற்றும் பாதுகாப்பான பணி நிலைமைகளை வலியுறுத்தி சக மருத்துவர்கள் போராட்டங்களை நடத்துவதற்குரிய சூழலை ஏற்படுத்தியது.

இந்தியா முழுவதும் உள்ள நகரங்களில் உள்ள பல அரசு மருத்துவமனைகள் இந்த வார தொடக்கத்தில் அவசர சிகிச்சைப் பிரிவுகளைத் தவிர அனைத்து சேவைகளையும் நிறுத்திவிட்டன. இளம் நிலை மருத்துவர்கள் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கோரி வெளியில் அமர்ந்து மறியல் நடத்தினர்.

முப்பததோரு  வயதான அந்த  மருத்துவர் வெள்ளிக்கிழமை இறந்து கிடக்கக் காணப்பட்டார். அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும்  இதன்  தொடர்பில்  தன்னார்வலர் ஒருவர்  கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

ஒரு சமூகமாக, நம் தாய்மார்கள், மகள்கள் மற்றும் சகோதரிகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த சீற்றத்தை என்னால் உணர முடிகிறது என்று இந்தியப் பிரதமர் மோடி இன்று 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறினார்.


Pengarang :