NATIONAL

நெங்கிரி இடைத் தேர்தல் – இரண்டு வார தீவிரப் பிரச்சாரம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது

குவா மூசாங், ஆக. 16 – தங்கள் பிரதிநிதியை வாக்காளர்கள் நாளை தேர்வு செய்யவுள்ள நிலையில் நெங்கிரி தொகுதியில் கடந்த இரு வாரங்களாக நடைபெற்ற  இடைத்தேர்தல் பிரச்சாரப்  ‘போர்’ இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது.

இந்த மாநில சட்டமன்றத் தொகுதி ஒற்றுமை  அரசாங்கத்தைப் பிரதிநிதித்துப் போட்டியிடும் பாரிசான் நேஷனல் மற்றும் மாநில அரசாங்கத்தை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள பெரிக்கத்தான்  நேஷனல் சார்பில் களமிறங்கிய பாஸ் கட்சிகளின் கவனத்தை  கடத்த இரு வாரங்களாகப் பெரிதும் ஈர்த்தது.

இரு கட்சி  வேட்பாளர்களும்  நிலப் பிரச்சனைகள், உள்கட்டமைப்புப் பிரச்சனைகள், வேலை வாய்ப்புகள் மற்றும் குடியிருப்பாளர்களின் நலன் தொடர்பான விவகாரங்கள் குறித்து குரல் கொடுப்பதிலும் அவற்றுக்குத் தீர்வு காண்பதிலும் மும்முரமாக ஈடுபட்டனர்.

இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்கு தானியங்கி பணப் பட்டுவாடா  இயந்திரம் (ஏ.டி.எம்.) இல்லாத குறையைத் தீர்ப்பதில் இந்த இடைத்தேர்தல்  பிரச்சாரம் வெற்றியைக் கொண்டு வந்துள்ளது.  ஊடக அறிக்கைகள் மற்றும் பாரிசான் வேட்பாளர் எழுப்பிய பிரச்சினையின் விளைவாக  தொகுதியில் ஒரு ஏ.டி.எம். இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

நெங்கிரி மாநில இடைத்தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தை பிரதிநிதிக்கும்  பாரிசான் வேட்பாளர் முகமது அஸ்மாவி ஃபிக்ரி அப்துல் கனி மற்றும் பெரிக்கத்தான் கூட்டணியை பிரதிநிக்கும் பாஸ் வேட்பாளர் முகமது ரிஸ்வாடி இஸ்மாயில் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.


Pengarang :