NATIONAL

இந்திய சமூகத்திற்கு உதவிக் கரம் நீட்டும் ‘நம்மை நாம் காப்போம்‘ இணைத்தளம்- சண்முகம் மூக்கன் தொடக்கி வைத்தார்

(ஆர்.ராஜா)
கிள்ளான், ஆக. 19 – இந்திய சமூகத்திற்கு உதவிக் கரம் நீட்டுவது,
அரசாங்கத் திட்டங்களை அவர்களுக்கு எடுத்துரைப்பது உள்ளிட்ட
நோக்கங்களின் அடிப்படையில் ‘நம்மை நாம் காப்போம்‘ எனும்
இணைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு இங்குள்ள விண்ட்ஹாம் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வில்
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சிறப்பு பணிகளுக்கான அதிகாரி
சண்முகம் மூக்கன் இந்த இணையத் தளத்தை அதிகாரப்பூர்வமாகத்
தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய சண்முகம், சிரமத்தில் இருப்பவர்கள் எளிதான
முறையில் உதவிகளையும் வழிகாட்டுதலையும் பெறுவதை உறுதி
செய்யும் நோக்கில் இந்த அகப்பக்கத்தை தாங்கள் உருவாக்கியுள்ளதாகச்
சொன்னார்.

அரசாங்கத்தின் வசம் நிறையத் திட்டங்கள் உள்ளன. ஆனால், அவற்றைப்
பெறுவதற்கு யாரை அணுகுவது? எந்த மாதிரியான உதவிகள்
அரசாங்கத்திடமிருந்து பெறுவது? என்றத் தகவல்களை தெரியாமல்
நீண்டகாலமாக மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்குத்
தேவையான தகவல்களையும் வழிகாட்டுதல்களையும் வழங்கக்கூடிய
ஓரிட மையமாக அந்த தளம் விளங்கும்.

நாட்டிலுள்ள ஆலயங்கள், அரசு சாரா அமைப்புகள், ஊடகங்கள்,
அரசாங்கம், மாணவர்கள் மற்றும் சமூகத்தின் உதவியுடன் இந்த
இணையத்தளத் திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இந்த தரப்பினரின்
ஒத்துழைப்பின் வாயிலாக சமூக மேம்பாட்டில் காணப்படும்
இடைவெளியைக் குறைக்க இயலும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த திட்டத்தில் தொடக்கக் கட்டமாக 51 ஆலயங்கள் இணைந்துள்ளன.
இவ்வாண்டு இறுதிக்குள் ஆலயங்களின் எண்ணிக்கையை 100ஆகவும்
அடுத்தாண்டு வாக்கில் 200ஆகவும் உயர்த்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

இந்த தகவல் இணையத் தளத் திட்டம் நாடு முழுவதும் நிச்சயம்
தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் அவர் கூறினார்.

தனி மனித முயற்சியால் சாதனைகளை உருவாக்க முடியாது. மாறாக,
சமுதாயத்தின் ஒட்டுமொத்த முயற்சியின் வாயிலாகவே நம்மால் சாதிக்க
முடியும். அந்த சாதனைக்கான முயற்சிதான் இந்த ‘நம்மை நாம் காப்போம்‘
என்ற இணையத்தள உருவாக்கமாகும்.

இந்த இணையத்தளத்தின் வாயிலாகப் பொது மக்கள் உணவு உதவி,
அமைச்சுகள் மற்றும் அரசு துறைகள் மூலம் அமல்படுத்தப்படும் உதவித்
திட்டங்கள், நோய், வர்த்தகம், கல்வி, குடியுரிமை, சமூக நலன் சார்ந்த
உதவிகள் தொடர்பான விபரங்களைப் பெற இயலும் என்றார் அவர்.

இந்த இணையத் தள தொடக்க விழாவில் சுங்கை பூலோ தொகுதி
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா உள்பட சுமார் 300 பேர்
கலந்து கொண்டனர்.


Pengarang :