NATIONAL

பிரதமர் நியமனம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்து – மொகிடின் மீது நடவடிக்கை எடுக்க பகாங் துங்கு மக்கோத்தா வலியுறுத்து

ஷா ஆலம், ஆக. 19 – பிரதமர் நியமனம் தொடர்பில் சர்ச்சைக்குரிய
கருத்தினை வெளியிட்ட பெரிக்கத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ
மொகிடின் யாசினின் நடவடிக்கை பகாங் தெங்கு மக்கோத்தாவுக்கு கடும்
சினத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் 16வது மாமன்னராக இருந்த போது பகாங் சுல்தான் அல்-சுல்தான்
அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா ஆற்றியப்
பணியினை வேண்டுமென்றே இழிவுபடுத்தும் வகையில் அந்த முன்னாள்
பிரதமரின் விமர்சனம் அமைந்துள்ளதாக தெங்கு ஹஸானால் இப்ராஹிம்
கூறினார்.

முன்னாள் பிரதமரும் மூத்த அரசியல்வாதியுமான மொகிடினின் அந்த
அறிக்கை உண்மைகளைத் திரித்துக் கூறும் விதமாகவும் பத்தாவது
பிரதமரை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் சுல்தான் அப்துல்லா
நடுநிலையாக நடந்து கொள்ளவில்லை என்றத் தோற்றத்தை ஏற்படுத்தும்
விதமாகவும் அமைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

மொகிடினின் அறிக்கை முதிர்ச்சியற்றதாவும் தாம் பிரதமராக
நியமிக்கப்படவில்லை என்பதை அவர் இன்னும் ஏற்றுக் கொள்ள இயலாத
நிலையில் உள்ளதையும் பிரதிபலிக்கிறது.

அவரது அறிக்கை மிகவும் ஆபத்தானது. மலாய் ஆட்சியாளர்கள் மீது
நம்பிக்கை இல்லை என்ற தோற்றத்தை மக்களிடையே வெளிப்படையாக
ஏற்படுத்துவதோடு மக்களைப் பிளவுபடுத்துவதையும் நோக்கமாகக்
கொண்டுள்ளது என்று என தெங்கு மக்கோத்தா அறிக்கை ஒன்றில்
கூறினார்.

பிரதமரை நியமிப்பதற்கான ஏகபோக உரிமையை அரசியலமைப்புச் சட்டம்
மாமன்னருக்கு வழங்கியிருந்த போதிலும், பத்தாவது பிரதமரை நியமனம் செய்யும் விஷயத்தில் சுல்தான் அப்துல்லா அலட்சியத்துடன் செயல்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமரை நியமனம் செய்வதற்கு முன்னர் அரசியலமைப்புச் சட்ட
வல்லுநர்கள், அரசாங்க உயர் அதிகாரிகள் மற்றும் மலாய்
ஆட்சியாளர்களின் கருத்தைப் பெற்றதாகவும் தெங்கு மக்கோத்தா
சொன்னார்.


Pengarang :