NATIONAL

ஊராட்சி மன்றங்களுக்கு 60,000 தேசியக் கொடிகளை மாநில அரசு வழங்கியது

ஷா ஆலம், ஆக. 19 – தேசிய மாதக் கொண்டாட்டத்திற்குப் புத்துணர்வை
ஏற்படுத்தும் நோக்கில 60,000 தேசியக் கொடிகளை (ஜாலுர் கெமிலாங்)
ஊராட்சி மன்றங்களுக்கு மாநில அரசு வழங்கியது.

ஒவ்வொரு ஊராட்சி மன்றத்திற்கும் தலா 5,000 கொடிகள் வீதம்
வழங்கப்படும் வேளையில், அவை அக்கொடிகளைப் பொது மக்களுக்கு
விநியோகிக்கும் என்று ஒற்றுமைத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்
டத்தோ ரிஸாம் இஸ்மாயில் கூறினார்.

நாட்டுப்பற்றைப் புலப்படுத்தும் விதமாக அனைத்து இடங்களிலும் தேசியக்
கொடிகளை பறக்கவிடும் வகையில் அனைத்து ஊராட்சி மன்றங்கள்
மற்றும் மாவட்டங்களுக்கு தலா 5,000 கொடிகள் வீதம் வழங்குகிறோம்.

தேசிய மாதத்தை முன்னிட்ட பல வளாகங்களும் வர்த்தக நிறுவனங்களும்
பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளதைக் காண முடிகிறது.
இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவதை நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம்
என்று அவர் சொன்னார்.

இங்குள்ள மிட்லண்ட்ஸ் மாநாட்டு மையத்தில் சமூக மத்தியஸ்தர்
உறுப்பினர்கள் மற்றும் அரசு துறைகளுடனான கலந்துரையாடல் மற்றும்
பதவி நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டுப்பற்றை அதிகரிக்கும் மற்றும் நாட்டை நேசிக்கும் உணர்வை
மக்கள் மத்தியில் விதைக்கும் நோக்கில் தேசியக் கொடியை பறக்கவிடும்
இயக்கத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த ஜூலை
21ஆம் தேதி தொடக்கி வைத்தார்.

‘மலேசியா மடாணி- ஜீவா மெர்டேக்கா‘ எனும் கருப்பொருளிலான 67வது
சுதந்திர தினம் எதிர்வரும் ஆகஸ்டு 31ஆம் தேதி புத்ராஜெயாவில் நடைபெறும்.

அதே சமயம் மலேசிய தினக் கொண்டாட்டம் சபா மாநிலத்தின் கோத்தா
கினபாலுவில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Pengarang :