NATIONAL

ஆசிரியை இஸ்திகமா படுகாலை – முன்னாள் ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

அலோர் காஜா, ஆக. 19 – ஆசிரியை ஒருவரை கடந்தாண்டு படுகொலை
செய்ததாக முன்னாள் ஆசிரியர் ஒருவருக்கு எதிராக இங்குள்ள
மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

மாஜிஸ்திரேட் டாக்டர் தியோ சூ யீ முன்னிலையில் தமக்கு எதிரான
குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அதனைப் புரிந்து கொண்டதற்கு
அடையாளமாக முகமது ஃபாட்ஸ்லி அரிபாட்ஸில்லா (வயது 36) என்ற
அந்த ஆடவர் தலையை அசைத்தார்.

எனினும், கொலை வழக்கு உயர் நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்டது
என்பதால் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.

கடந்தாண்டு டிசம்பர் 26ஆம் தேதிக்கும் 31ஆம் தேதிக்கும் இடையே
இங்குள்ள பூலாவ் சிப்பாங், கம்போங் தஞ்சோங் ரிமாவ் லுவாரில்
சாலையோரம் இஸ்திகமா அகமது ரோஸி (வயது 33) என்ற அந்த
ஆசிரியையை படுகொலை செய்ததாக முகமது பாட்ஸ்லி மீது
குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை, மரண தண்டனை
விதிக்கப்படாதப் பட்சத்தில் 30 முதல் 40 ஆண்டு வரையிலான
சிறைத்தண்டனை மற்றும் 12க்கும் குறையாதப் பிரம்படி விதிக்க வகை
செய்யும் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் அவர்
குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

இது கொலைக் குற்றச்சாட்டு என்பதால் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு
ஜாமீன் வழங்க அரசுத் தரப்பு வழக்கறிஞர் முகமது நஸ்ரின் அலி ரஹிம்
பரிந்துரைக்கவில்லை. டி.என்.ஏ. மற்றும் சவப்பரிசோதனை அறிக்கையைப்
சமர்ப்பிப்பதற்கு தேதி நிர்ணயிக்கும்படியும் அவர் நீதிமன்றத்தைக் கேட்டுக்
கொண்டார்.


Pengarang :