NATIONAL

சுக்மா சிலம்பப் போட்டியைக் காண ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு வருகை

கூச்சிங், ஆக. 20 – சுக்மா எனப்படும் மலேசிய விளையாட்டுப் போட்டிகளை
முன்னிட்டு இன்று இங்குள்ள ஹிக்மா எக்ஸ்சேஞ் சென்டர், சாத்தோக்
பால்ரூமில் நடைபெற்ற சிலம்பப் போட்டியைக் காண மனித வளம்
மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வருகை
புரிந்தார்.

இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோவின்
அரிய முயற்சியால் சுக்மா போட்டியில் பதக்க விளையாட்டாக
அங்கீகரிக்கப்பட்ட இந்த சிலம்பப் போட்டியில் பங்கேற்கும் சிலாங்கூர்
விளையாட்டாளர்களுக்கு தார்மீக ஆதரவை வழங்குவதை அவரின் இந்த
வருகை நோக்கமாக க் கொண்டிருந்தது.

தமிழ் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த சிலம்பக் கலை பல நூறு
ஆண்டுகளாகத் தமிழர்களின் பாரம்பரியத் தற்காப்புக் கலையாக விளங்கி
வருகிறது. மூங்கில் கழியைக் கொண்டு ஆடப்படும் இந்த ஆட்டம்,
தற்காத்துக் கொள்வதற்கும் தாக்குதல் நடத்துவதற்கும் பயனப்டுத்தப்படும். மேலும், கால்களின் நகர்வை நுட்பமாகப் பயன்படுத்துவது இதன் சிறப்பு அம்சமாகும்.

இந்த சிலம்பக் கலை தற்காப்புக் கலையாக மட்டுமின்றி, உடல்
வலிமையைப் பேணுவதற்கும், கட்டொழுங்கு மற்றும் மனதை
ஒருநிலைப்படுத்துவதற்கும் பெரிதும் துணை புரிகிறது. காலப் போக்கில்
இந்த கலை பதக்கங்களுக்காகப் போட்டியிடும் ஒரு விளையாட்டாகவும்
வளர்ச்சி கண்டுள்ளது.

இந்த விளையாட்டின் பெருமையை தேசிய மற்றும் அனைத்துலக
அரங்கில் நமது விளையாட்டாளர்கள் பறைசாற்றி வரும் வேளையில்
இது வெறும் விளையாட்டாக மட்டுமின்றி தமிழர்களின் பெருமைக்குரிய
கலாசாரத்தின் அடையாளமாகவும் திகழ்ந்து வருகிறது.

சுக்மா போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிலாங்கூர்
சிலம்பக் குழுவினருக்குப் பாப்பாராய்டு தனது பாராட்டுகளைத் தெரிவித்துக்
கொண்டார். இப்போட்டியின் ஆண்கள் பிரிவில் சிலாங்கூர் தங்கப் பதக்கம்
வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :