NATIONAL

சுங்கை ஆயர் தாவார் – ஊத்தாங் மெலிந்தாங் இரண்டாவது பாலம் 2026 டிசம்பரில் முற்றுப் பெறும்

ஷா ஆலம், ஆக. 20 – சபாக் பெர்ணம் மாவட்டத்தில்  உள்ள சுங்கை ஆயர் தாவாரையும் பேராக் மாநிலத்தின் ஊத்தாங் மெலிந்தாங்கையும் இணைக்கும் இரண்டாவது  பாலம் எதிர்வரும்  2026 டிசம்பர் மாதம் பூர்த்தியாகும் என்று மந்திரி புசார் கூறினார் .

கடந்த 2022ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள்  தொடங்கப்பட்ட இந்த 2.9 கிலோ மீட்டர் நீளம் கொண்ட பாலம்  இரு நகரங்களுக்கிடையிலான பயண நேரத்தை 30 நிமிடங்களாகக் குறைக்கும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

மொத்தம் 2 கோடியே 10 லட்சம் வெள்ளி செலவில் நிர்மாணிக்கப்படும் இந்தப் பாலம்  சுங்கை ஆயர் தாவாரையும் பேராக் மாநிலத்தின் ஊத்தாங் மெலிந்தாங்கையும்   இணைப்பதோடு வாகனமோட்டிகளின் வசதிக்காக ‘யு’  வளைவுகளையும் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இந்த புதிய பாலம் வட்டார மக்களின் பயணத்தை எளிதாக்கும். தற்போது இப்பகுதி மக்கள் பேராக் மாநிலம் செல்ல வேண்டுமானால் பெக்கான் சபாக் பாலம் வழியாக 20 முதல் 30 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய வேண்டியுள்ளது என்றார் அவர்.

பேராக் மாநிலத்தில் நில மீட்பு மற்றும் பால வடிவமைப்பு உள்ளிட்ட காரணங்களால்  இப்பால நிர்மாணிப்பில் தாமதம் ஏற்பட்டது. ஆகவே, இத்திட்டம் மறுஅட்டவணையிடப்பட்டு எதிர்வரும் 2026ஆம் ஆண்டில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என அவர் சொன்னார்.

இன்று பால நிர்மாணிப்புப் பணிகளைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்

சபாக் பெரணம் நகரினூடே செல்லும் இந்தப் பாலம் சாப்டா எனப்படும் சபாக் பெரணம் வட்டார மேம்பாட்டிற்கும் உந்து சக்தியாக விளங்கும் எனவும் அவர் சொன்னார்.

பெர்ணம் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் அமைக்கப்படும் என்று கடந்த 2021 ஆம் ஆண்டு மாநில அரசாங்கம் அறிவித்தது. இது 12வது மலேசியா திட்டத்தின்  கூட்டரசு கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும்.


Pengarang :