NATIONAL

காஸா படுகொலைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் அனைத்துலக சமூகம் மெத்தனம் – அன்வார் சாடல்

புதுடில்லி, ஆக 21- காஸாவில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக நடத்தப்படும் அட்டூழியங்களைத் தடுப்பதில் அனைத்துலகச் சமூகம் குறைவாக அக்கறை காட்டுவது தொடர்பான தனது விமர்சனத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று மீண்டும் முன்வைத்தார்.

இஸ்ரேல் பெரும் எண்ணிக்கையிலான மக்களை கொன்றுள்ளது. ஆனால் அது குறித்து அனைத்துலக நிலையில் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் கூறினார்.

உக்ரேன் இனப்படுகொலை குறித்து பலர் தங்கள் கருத்துக்களை வெளியிட்டதைச் சுட்டிக் காட்டிய அவர், பாலஸ்தீனத்தில் 40,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டபோது​​​ அதை ‘போரின் விளைவு’ என்று கருதி அப்படியே ஏற்றுக்கொண்டனர் என்றார்.

இது உண்மையில் வியப்பாக உள்ளது.  நான் இதை ஒரு கபடத்தனமாகக் கருதுகிறேன். இந்த கபடத்தனம் முடிவுக்கு வர வேண்டும் என்று அவர் நேற்று இங்கு  சிந்தனையாளர் கூட்டத்தில் விரிவுரையை வழங்கிய பின்னர் நடைபெற்ற கேள்வி பதில் அமர்வின் போது கூறினார்.

கடந்த திங்கள்கிழமை  தொடங்கி முதல் மூன்று நாள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டு  அன்வார் இந்தியா வந்துள்ளார்.

அமைதியை நோக்கிய எந்தவொரு அர்த்தமுள்ள முயற்சியும் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் வன்முறைகளையும் நிறுத்துவதன் மூலம் தொடங்க வேண்டும் என்று முன்னதாக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவொன்றில் அன்வார் கூறியிருந்தார்.


Pengarang :