NATIONAL

சேவை வழங்கல் கண்காணிப்பு குழுவை அமைக்க அமைச்சுகள், அரசு துறைகளுக்கு உத்தரவு

புத்ராஜெயா, ஆக. 21- தங்கள் துறைகளில் சேவை வழங்குவதில்
ஏற்பட்டுள்ள மேம்பாடுகளை கண்காணிப்பதற்கு ஏதுவாக சேவை வழங்கல்
மேம்பாட்டுக் கண்காணிப்புக் குழுவை நிறுவும்படி அனைத்து அமைச்சுகள்
மற்றும் அரசு துறைகள் பணிக்கப்பட்டுள்ளன.

மக்களுக்கு விரைவாக சேவை வழங்குவதற்கு ஏதுவாக தரத்தை
மேம்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் கடந்த ஆகஸ்டு 16ஆம் தேதி நடைபெற்ற மாப்பா எனப்படும்
பொதுச் சேவை பிரீமியர் மாநாட்டில் வலியுறுத்தியிருந்ததன்
அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களின் தேவைகளை ஈடு செய்வதற்கு ஏதுவாக நடப்பிலுள்ள
ஆறு பணி செயல்முறைகள் மற்றும் வாடிக்கையார் சாசனங்கள்
புதுப்பிக்கப்படுவதை இந்த விவகாரம் உள்ளடக்கியுள்ளது என்று பொதுச்
சேவைத் துறை துணைத் தலைமை இயக்குநர் (மேம்பாடு) டத்தோ அனீஸி
இப்ராஹிம் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் சேவை வழங்கல் மேலாண்மை முறையை
வலுப்படுத்துவது மற்றும் ஒருமுகப்படுத்துவதை இந்த வழிகாட்டி
நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த திட்டம் முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய
அமைச்சுகள், அரசு துறைகள், ஏஜென்சிகள், பொதுச் சேவைத் துறையின்
ஆய்வு, திட்டமிடல் மற்றும் கொள்கைப் பிரிவுக்கு சேவை தொடர்பான
தங்கள் அறிக்கைகளை அனுப்ப வேண்டும் என அனைத்து அமைச்சுகள்
மற்றும் துறைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் அவர்
வலியுறுத்தயுள்ளார்.

வழக்கமான அறிக்கைகள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பொதுச்
சேவைத் துறையின் தலைமை இயக்குனருக்கு அனுப்பப்பட வேண்டும்
என்றும் அவர் சொன்னார்.


Pengarang :