NATIONAL

பொதுமக்களுக்கு உதவிட சிலாங்கூர் சுகாதார சேவை தன்னார்வாளர்கள் தயார்

ஷா ஆலம், ஆகஸ்ட் 23: சிலாங்கூர் மாநில மக்களுக்கு சேவையையும் நிபுணத்துவத்தை யும் வழங்குவதில் சிலாங்கூர் சமூக நலத் தொண்டர்கள் (சுக்கா) அமைப்பு உறுதியாக உள்ளது. இந்த அமைப்பு 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

 சுக்கா  எனப்படும்  இந்த  அமைப்பு பல பொறுப்புகளை நிறைவேற்றியுள்ளது என செந்தோசா தொகுதியின் சுக்கா தன்னார்வ ஆலோசகர் டாக்டர் உமா ராணி ராமகிருஷ்ணன் கூறினார்.

“முன்னர் சுக்கா அமைப்பு கோவிட்-19 க்காக நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“நாங்கள் மருத்துவப் பயணத்தை மேற் கொண்டோம். உடல் நலிவடைந்தவர்களுக்கான, படுக்கைகள், சக்கர நாற்காலிகள் மற்றும் பற்பல உதவிகள் கேட்க எங்களை அழைக்கிறார்கள்,” என்று ஹை சிலாங்கூர் என்ற நிகழ்ச்சியில் அவர் கூறினார்.

டிஸ்லெக்ஸியா மற்றும் ஆட்டிஸ்டிக்ஸ் உள்ளிட்ட சிறப்பு குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன என டாக்டர் உமா தெரிவித்தார்.

“நாங்கள் கண் பரிசோதனை செய்ய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுகிறோம், பரிசோதனைக்குப் பிறகும், நாங்கள் முன் முயற்சி எடுக்கிறோம், அவர்களுக்கு உதவ நேரம் ஒதுக்குகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

இதுவரை 600க்கும் மேற்பட்ட நபர்கள் சுக்கா தன்னார்வலர்களாகப் பதிவு செய்துள்ளதாக டாக்டர் உமா விளக்கினார்.

ஒரு தன்னார்வ தொண்டராக  பங்காற்ற ஒருவரின்  நிபுணத்துவத்தை பொருட்படுத்தாமல்  அனைத்து தனிநபர்களும் பங்களிக்க  கதவுகள்  திறந்திருக்கும் என்று அவர் கூறினார்.

“ஒவ்வொரு தொகுதியிலும் சுக்கா சிலாங்கூர் அமைப்பில் 11 பேர் உள்ளனர், அதாவது 1 ஒருங்கிணைப்பாளர் மற்றும் 10 உறுப்பினர்கள். ஆக மொத்தம் 56 தொகுதியில் 600 உறுப்பினர்களுக்கு மேல் உள்ளனர்.

“சமுதாயத்திற்கு சேவை செய்ய மருத்துவராக இருக்க வேண்டிய அவசியமில்லை, சேவை செய்ய, சேவை மனப்பான்மை மட்டுமே இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், அவர் தொகுதி அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு சுக்காவில் சேருமாறு பொது மக்களையும் கேட்டுக்கொண்டார்.


Pengarang :