முன்னேற்றத்திற்கான எந்த அறிகுறியும் இன்றி காஸா அமைதிப் பேச்சு கெய்ரோவில் தொடர்கிறது

கெய்ரோ/ஜெருசலம், ஆக 25 – இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் நோக்கில் காஸா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளத் தரப்பினர், நேற்று கெய்ரோவில் புதிய சமரச
பரிந்துரைகள்  பற்றி விவாதித்தனர்.  ஆனால், பல மணிநேர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அமைதி முயற்சிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

கெய்ரோவில் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பிலடெல்பி  காரிடோர் பகுதியில் எட்டு நிலைகளை வைத்திருக்க இஸ்ரேல் வலியுறுத்துகிறது  என்று சமரசப் பேச்சுவார்த்தையில்  நெருக்கமான  தொடர்புடைய பாலஸ்தீனிய அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

காஸாவில்  மனிதாபிமான நிலைமை மோசமடைந்து வருவதோடு பாலஸ்தீன பகுதியில்  ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் போலியோ  கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து கெய்ரோ பேச்சுவார்த்தைக்கு உயிரூட்டப்பட்டது.

இதனிடையே, காஸாவில் நேற்று நிகழ்ந்த  இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்களில்  50 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். சண்டை தொடரும் நிலையில்  பாதிக்கப்பட்டவர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டுள்ளனர் அல்லது சாலைகளில் நிராதரவாகக் கிடக்கின்றனர்.

இஸ்ரேலுக்கும்  மத்தியஸ்தர்களாகச் செயல்படும்  எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தையில்  வெளிவரும் எந்தவொரு பரிந்துரைகளையும் மறுபரிசீலனை செய்வதற்காக  ஹமாஸ் தூதுக்குழு ஒன்று நேற்று கெய்ரோவுக்கு வந்ததாக  எகிப்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.


Pengarang :