NATIONAL

அரச மலேசிய கடற்படைக் கப்பல் கடலில் மூழ்கியது- 39 பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்பு

கோலாலம்பூர், ஆக. 26 – கடலுக்கு அடியில் இருந்த பொருள் மீது மோதியதால் ஏற்பட்ட துவாரம் காரணமாக மலேசிய மலேசிய கடற்படைக்குச் சொந்தமான கே.டி. பெண்டேக்கார் என்ற கப்பல் கடலில் மூழ்கியது.  இச்சம்பவம், ஜோகூர் மாநிலத்தின் தஞ்சோங் பென்யுசுப் தென்கிழக்கே இரண்டு கடல் மைல் தொலைவில் நேற்று மாலை 3.45 மணி அளவில் நிகழ்ந்தது.

கடல்சார் அமைப்பினரின் துரித நடவடிக்கையின் காரணமாக அக்கப்பலில் இருந்த 39 பணியாளர்களும் கப்பல் மூழ்குவதற்கு முன்னரே பத்திரமாக காப்பாற்றப்பட்டதாக அரச மலேசிய கடற்படை அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

இச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மீட்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் ஜோகூர், தஞ்சோங் பெங்கேலவில் உள்ள கே.டி. சுல்தான் இஸ்மாயில் கப்பலில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்று அது குறிப்பிட்டது.

கடலில் மூழ்கிய அக்கப்பலை மீட்கும் நடவடிக்கையில் தாங்கள் தற்போது ஈடுபட்டு வரும் வேளையில் சம்பவ இடத்தில் கண்காணிப்பை மேற்கொள்வதற்கும் சுற்றுவட்டாரத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் கடற்படைக் கப்பல்கள் அங்கு நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன என அந்த அறிக்கை கூறியது.

நேற்று நண்பகல் 12.00 மணியளவில் ரோந்து நடவடிக்கையை மேற்கொண்டிருந்த போது கடலுக்கு அடியிலிருந்து பொருள் மீது மோதி கப்பலிலின் அடிப்பகுதியில் துவாரம் ஏற்பட்டு நீர் புகுந்ததாக கடற்படை முன்னதாக கூறியிருந்தது.

இந்த விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை வாரியம் ஒன்று விரைந்து அமைக்கப்படும் என்றும் அது குறிப்பிட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பகிர வேண்டாம் என பொதுமக்களை கடற்படை கேட்டுக் கொண்டதோடு இச்சம்பவம் தொடர்பான சமீபத்திய நிலவரங்களை அந்த பாதுகாப்பு அமைப்பின் அதிகாரப்பூர் வட்டாரங்கள் வெளியிடும் எனவும் கூறியது.


Pengarang :